Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை ஏற்கனவே மீறியுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர்பில், நேற்று புதன்கிழமை இலங்கை தொடர்பிலான அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் உரையாற்றிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பவற்றின் கட்டமைப்புசார் சிதைவு மற்றும் ஊழல் போன்றவற்றால் தகமை இழந்து போயிருக்கும் இலங்கை நீதிக்கட்டமைப்புகள், குற்றவியல் விசாரணையையும், அதனைத்தொடர்ந்த குற்றவியல் வழக்கு தொடுத்தலையும் கொண்டு நடத்தக்கூடிய உள்ளகப்பொறிமுறையொன்றிற்கு பொருத்தமற்றது என்பதே, 2015 செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அலுவலக விசாரணை அறிக்கையின் முக்கிய வெளிப்படுத்தலாக இருந்தது.

இந்த பின்னணியிலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை நிராகரித்து, ஒரு கலப்பு நீதிமன்றை கோரி நின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இந்தத் தடவை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூட, கலப்பு நீதிமன்றம் குறித்தான தனது சிரத்தையை விசேடமாக அழுத்தித் தெரிவித்திருந்த போதிலும் , இலங்கையின் அதிகாரப்படி நிலையின் உச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதியும், பிரதமரும் பல முக்கிய அமைச்சர்களும், மீண்டும் மீண்டும் இந்த கலப்பு நீதிமன்றை நிராகரித்திருக்கிறார்கள்.

2015 ஒக்டோபர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே அவர்கள் மிகத்தெளிவாக இதை நிராகரிப்பதை தெரிவித்து வந்துள்ளார்கள்.

இவற்றைவிட, இலங்கையின் எந்த ஒரு படைவீரனும் எந்த ஒரு நீதிப்பொறிமுறையின் கீழும் தண்டிக்கப்படாமல் இருப்பதை நான் உறுதிப்படுத்துவேன் என இலங்கை ஜனாதிபதியே தெரிவித்திருப்பதுதான் இங்கு எச்சரிக்கையுடன் குறித்துக்கொள்ளவேண்டிய மிகவும் முக்கியமான விடயமாகும்.

நடைமுறை யதார்த்தம் இப்படியாக இருக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 ஒக்டோபர் தீர்மானத்தில், ஏற்கனவே மிகத்தெளிவாக அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட, கலப்பு நீதிமன்றம் குறித்த பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கென மேலும் இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதென்பது உண்மையில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தனது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துச்செல்லவே வழிவகுக்கக்கூடும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்றுக்கொள்கிறாரா?

இரண்டாவதாக, உரோம் சாசனத்தினை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையை வேண்டியிருக்கும் நிலையில் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான நீதிக்கான வழியென்பதை ஆணையாளர் ஏற்றுக்கொள்கிறாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Post a Comment

Followers