Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காப்பது பொறுப்பற்ற செயல் என்று கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை தங்களை விரக்தியடைய வைத்துள்ளதாகவும், தாம் வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய ஏற்படலாம் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏ-9 வீதியில் உள்ள கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்றும் (சனிக்கிழமை) 27வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் பங்கெடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கருத்து தெரிவிக்கையில், “இறுதி யுத்த முடிவின் போது எனது மகன் தலையில் காயப்பட்டிருந்தார். அந்த காயத்துடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த போது எனது மகனை மறித்த இராணுவத்தினர் அவரை வைத்திய சாலையில் சேர்ப்பதாக கூறினார்கள்.

நானும் எனது மகனுடன் வைத்திய சாலைக்கு வருவதாக கூறி அங்கே நின்ற போதும், எனது மகனை தனியாக ஒரு பஸ்சில் ஏற்றினார்கள். என்னை மற்றுமொரு பஸ்சில் ஏற்றி முகாமிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். எனது மகன் ஏற்றப்பட்ட பஸ்சில் மேலும் பலர் இருந்தனர்.

முகாமிற்குள் இருந்து நாங்கள் வெளியில் வர கால தாமதம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் முகாமைவிட்டு வெளியில் வந்த பின்னர் வவுனியா வைத்தியசாலையில் சென்றுமகனை விசாரித்தோம்.

வைத்தியசாலையில் மே மாதம் (17) அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் (21) அவர் சிகிச்சையில் இருந்து விலக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் என்றும் பதிவுகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரை அழைத்துச் சென்றவர்களுடைய தகவல்கள் எமக்கு தெரிவிக்கப்படவில்லை. இதன் பின்னர் அவரை நாங்கள் தேடாத இடம் இல்லை. கொழும்பு 4 ஆம் மாடிக்கும் சென்றும் தேடினோம். அவர் எங்கும் இல்லை.

பல இடங்களில் முறைப்பாடு செய்திருந்தோம். எந்த பயனும் இல்லை. முறைப்பாடுகள் செய்த பின்னர் புலனாய்வு பிரிவினர் எமது வீட்டிற்கு தேடி வந்து விசாரித்தார்கள். எத்தனையோ விசாரணைகளுக்கு முகம் கொடுத்துவிட்டோம். ஆனால் எமது உறவுகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எத்தனையோ விசாரணைகளை செய்யும் இந்த அரசாங்கம் எமது உறவுகள் எங்கு உள்ளார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த மறுக்கின்றது. இவ்வாறாக அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது நல்லதாக இருக்காது.” என்றுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசின் மௌனம் பொறுப்பற்றது: கிளிநொச்சி போராட்டக்காரர்கள் கவலை!

Post a Comment

Followers