Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லையானால் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யலாம் என்று தேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல், விண்ணப்ப தாரருக்கு தரப்படவில்லையானால் அவர் சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்புக்கு எதிராக நுகர்வோர் குறை தீர் மன்றத்தை அணுகலாம்; அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று ஒரு முன்னோடியான அதிரடியான தீர்ப்பு ஒன்றை சீராய்வு மனு ஒன்றில் தேசிய நுகர்வோர் குறைகள் தீர் ஆணையம் வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின்படி, கேட்ட தகவல் விண்ணப்பதாரருக்கு வழங்கப் படவில்லையானால், அது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ஓர் 'சேவைக் குறைபாடாகும்'.

இது சம்பந்தமாக மைசூர் மாவட்ட நுகர்வோர் மன்றம் வழங்கிய ஆணையை தேசிய
ஆணையம் உறுதி செய்து தீர்ப்புரைக்கையில், "தகவல் சட்டப்படி கேட்ட தகவல்
தரப்படவில்லை என்ற பிரச்சனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு
2(1)(ஓ)-இன் வரம்பு மற்றும் பரவெல்லையில் வருகிறது. இப்பிரிவின்படி சேவை
என்பது பயன்படுத்த வாய்ப்பு உடையவர்களுக்கு கிடைக்கச் செய்யப் பெறும்
எந்த வகையான சேவையும் என்று பொருள்படும். இதில் செய்திகள் அல்லது பிற
தகவல்கள் தொடர்பான வசதிகளுக்கு வகை செய்வதும் அடங்கும். (The case would
fall within the scope and ambit of Section 2 of CP Act, which provides
that service means service of any description which is made available
to potential users, which include purveying of news or supplying of
other information) என்று கூறியது.

மைசூரை சேர்ந்த எஸ்.பி.திருமலா ராவ் ஒரு மருத்துவர். இவரது மருத்துவ
மனைக்கு முன் உள்ள நடைபாதையில் தொலைபேசி கம்பிவடங்களை பதிப்பதற்காக ஒரு
தனியார் தொலைபேசி நிறுவனம் குழி ஒன்றை பறித்திருந்தது. பணி முடிந்த பின்
அதை மூடி முன்பிருந்ததை போல் செய்யாமல் விட்டுவிட்டது. பல நாட்கள்
இப்படியே சரி செய்யப்படாமல் இருப்பதை கண்ட திருமலா ராவ், இதற்கு காரணமான
அத்தொலைபேசி நிறுவனத்தின் விவரங்களை கோரி மைசூர் மாநகராட்சியின் பொது
தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரூ.10/- கட்டணம்
செலுத்தி விண்ணப்பம் செய்தார். ஆனால் அவருக்கு யாதொரு தகவலும்
வழங்கப்படவில்லை. தகவல் கொடுப்பதற்கென தகவல் சட்டம் நிருணயம் செய்துள்ள
காலமும் கடந்து விட்டது.

இவ்வாறு தகவல் தராமல் இருப்பது ஒரு சேவைக் குறைபாடாகும் என்றும், எனவே
தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி, திருமலா ராவ் மைசூர்
மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மாவட்ட நுர்கர்வோர் மன்றத்தில் புகார்
செய்தார். அதில் தோன்றிய மாநகராட்சி நிருவாகம், "தங்களுக்கு இருந்த
அதிகப்படியான பணிப்பளுவின் காரணமாக தகவல் வழங்க முடியவில்லை" என்று
சமாதானம் சொன்னது. ஆனால் இதை மைசூர் மாவட்ட மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
அது தனது ஆணையில்,இப்பிரச்சனையில் புகார்தாரர் ஒரு 'நுகர்வோராக'
நுகர்வோர் மன்றத்தை அணுக உரிமை உண்டு. எனவே தகவல் அறிதல் என்ற மதிப்பு
மிக்க உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் புகார்தாரர் திருமலா ராவுக்கு
மைசூர் மாநகராட்சி பெயரளவு இழப்பீடாக ரூ. 500/- அளிக்க வேண்டும் என்று
தீர்ப்புரைத்தது.

ஆனால் மைசூர் மாநகராட்சி, இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில
நுர்கர்வோர் குறைகள் தீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கு மாவட்ட
மன்றத்தின் தீர்ப்பை கர்நாடக ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தனது
ஆணையில், "தகவல் அறியும் சட்டப்படி கேட்ட தகவல் அதற்குரிய கால
வரம்பிற்குள் தரப்படவில்லையானால், அதற்கான விண்ணப்பம் நிராகரிக்
கப்பட்டதாக கருதப்பட வேண்டும். இதை எதிர்த்து அடுத்துள்ள மேல் நிலை
அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்வதே இதற்கான தீர்வழியாகும்.
அப்படியிருக்க இதற்காக நுகர்வோர் மன்றத்தை நாடுதல் ஆகாது" என்று கூறி
மாவட்ட மன்றத்தின் ஆணையை இரத்து செய்து, திருமலா ராவின் புகரை தள்ளுபடி
செய்து தீர்ப்புரைத்தது.

கர்நாடக ஆணையத்தின் தீர்ப்பை ராவ் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேசிய
ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அங்கு ராவின் பக்கமே மீண்டும்
தீர்ப்பானது. கர்நாடக ஆணையத்தின் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு மைசூர்
மாவட்ட மன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

தகவல் சட்டப்படி தகவல் கோரும் ஒருவர் அதற்கான கட்டணமாக ரூ. 10/-
செலுத்துகிறார். எனவே அவர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நுகர்வோர்
ஆகிறார். இங்கு புகார்தாரரும் இவ்வாறு கட்டணம் செலுத்தி தகவல்
கேட்டுள்ளார். ஆனால் அது அவருக்கு வழங்கப்படவில்லை. மறுபயனுக்காக
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி சேவைகளை பெறும் ஒருவருக்கு அச்சேவை
வழங்கப்படவில்லையானால் அது சேவைக் குறைபாடாகும் (The Complainant had
availed of the services under the said Act for consideration by paying
fee and had sought information, which was not supplied to him, which
amounts to deficiency of service), என்று கூறி தேசிய ஆணையம் ராவின்
மேல்முறையீட்டை அனுமதித்தது.

இத்தீர்ப்பில், தகவல் தராத அலுவலர்களுக்கு, அபராதம் விதிக்க தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20-இல் வகை செய்யப்பட்டிருந்தாலும்,
தகவல் கோரி அது வழங்கப்படாத நுகர்வோர்களுக்கு சேவைக்குறைபாட்டிற்காக
இழப்பீட்டின் வடிவில் எந்தப் தீர்வழியும் வழங்க அதில் வகை செய்யப்பட
வில்லை (Though the RI Act provided for penalties under Section 20 of
the Act, yet it did not provide for any remedy to the consumers who
have sought information for deficiency of service in the nature of
compensation or damages for not furnishing the information),என்று
தேசிய ஆணையம் கூறியது.

0 Responses to கேட்ட தகவல் தரப்படவில்லையானால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.