Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் பேராட்டத்தை இசை வடிவத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தியதில் மறைந்த எஸ்.ஜி. சாந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

மாதாந்த தொலைத்தொடர்பு வழி அரசவை அமர்வில் மரியாதை வணக்க இரங்கல் உரையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கியுள்ளார்.

தனது இரங்கல் உரையில் பிரதமர் உரித்திரகுமாரன் குறிப்பிட்டதாவது,

தமிழீழ தேசத்தின் குயிலாக தேச விடுதலைப்பாடல்களை இசைத்து போராளிகளின் விடுதலை வேட்கையினையும் மக்களின் உணர்வுகளையும் துடிப்புடன் வெளிப்படுத்திய பாடகர் எஸ்.ஜி. சாந்தன் (சாந்தலிங்கம் குணரட்ணம்) நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தினார் என்ற சேதியறிந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருந்துயரடைகிறது.

இப் பெரும் கலைஞனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நாம் மரியாதை வணக்கம் செலுத்துவதோடு அவரது பிரிவால் பெருந்துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மக்களுடன் நாமும் எம்மை இணைத்துக் கொள்கிறோம்.

சாந்தன் அவர்கள் தமிழீழ தேசம் போற்றியதொரு பெருங்கலைஞர். சிறந்த பாடகராக மட்டுமல்லாது அருமையானதோர் இசைநாடகக் கலைஞராகவும் விளங்கியவர்.

அவரது குரலில் வெளிப்படும் உணர்வு அலாதியானது. வீர உணர்வுடன் அவரது குரலில்; வெளியாகிய பாடல்கள் குழந்தைகள் முதல் மூத்தவர் வரை வீர உணர்வைத் தோற்றுவித்தன.

இவரது துயரம் நிறைந்த பாடல்கள் எமது தேசத்தையே துயரத்தில் மூழ்கித்தவை.களத்தில் நின்ற போராளிகளின் கருவிக்கும் உயிர்ப்புக் கொடுக்கும் வீச்சு அவரது குரலில் இருந்தது.

பாடல் எழுதிய கவிஞரின் மனப்பதிவுக்கும், இசையமைப்பாளரின் கற்பனை வளத்துக்கும் உயிர் கொடுக்கும் திறமை இவரிடம் இருந்தது.

பாடல் வரிகளை நன்கு உள்வாங்கி, அதன் உணர்வை தனது உள்ளுணர்வுடன் இணைத்துப் பாடல்களை இவர் பாடும் பாங்கு சாந்தன் அவர்களுக்கே உரிய தனித்துவமான ஆளுமையாகும்.

விடுதலைப் பேராட்டத்தை இசை வடிவத்தின் ஊடாக மக்கள்மயப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. சாந்தன் அவர்களது விடுதலைப்பாடல்கள் அவருக்குத் தேசியத் தலைவரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொடுத்தன.

2009 ஆம் மே மாதத்தில் தமிழீழமண் சிறிலங்காப்படையினரால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் சாந்தன் அவர்களும் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்புக் காவலில் சில காலம் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னரான காலங்களில் சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு கடினமானதொரு வாழ்க்கைச் சூழலுக்குள் அவர் உள்ளானார்.

இந் நிலையில் சிறுநீரகப் பாதிப்பினால் ஏற்பட்ட நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்தது. சாந்தன் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரது பாடல்கள் ஈழத் தமிழர் தேசத்துடன் வாழந்து கொண்டேதான் இருக்கின்றன.

அவரது இறுதி நிகழ்வில் ஒலிக்க விடப்பட்ட ''இந்த மண் எங்களின் சொந்த மண்..''என்ற அவரது பாடல் உறவினர், மக்கள் அழுகையொலியுடன் காற்றில் கலந்த போது எமது மண்ணை விடுவிக்கும் உணர்வும் மக்களுக்குள் கிளர்ந்திருக்கும்.

காலம் ஆகிப் போன பின்னரும் தனது குரலால் தேசத்தை வாழ வைக்கும் இப் பெருங்கலைஞனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை வணக்கங்களை நாம் அனைவரும் எழுந்து நின்று அகவணக்கம் செலுத்தி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

0 Responses to விடுதலைப் பேராட்டத்தை மக்கள் மயப்படுத்தியதில் மறைந்த சாந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு: வி.உருத்திரகுமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com