Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் பென்சில்வானியா பல்கலைக் கழகம் மற்றும் வார்ட்டொன் பள்ளி மற்றும் அமெரிக்க செய்தி மற்றும் உலகச் செய்திப் பிரிவும் BAV என்ற உலகளாவிய அமைப்பும் இணைந்து அண்மையில் உலகின் மிகச் சிறந்த நாடுகளின் 2 ஆவது வருடாந்த பட்டியலை வெளியிட்டுள்ளன.

இதில் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2 ஆம் இடத்தைக் கனடாவும் 3 ஆம் இடத்தை பிரிட்டனும் தக்க வைத்துள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ள அமெரிக்காவை ஜேர்மனி, ஜப்பான் மற்றும்  சுவீடன் ஆகிய நாடுகளும் பின்னுக்குத் தள்ளி உள்ளன. கடந்த வருடம் 4 ஆவது இடத்தில் இருந்து இவ்வருடம் 7 ஆவது இடத்தை நோக்கி அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த நாடுகளின் புள்ளி விபரமானது, அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சுமார் 21 000 வணிகத் தலைவர்கள்,  முக்கியஸ்தர்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அதாவது ஒவ்வொரு நாடுகளினதும் குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்பம்சம் குறித்து அவர்களின் பார்வை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டதாகும்.

இந்தத் தரவரிசை அமெரிக்காவின் பல்கலைக் கழகங்கள், வைத்திய சாலைகள் மற்றும் கார் வண்டிகள் குறித்த அமெரிக்க செய்தி நிறுவனங்களின் தரப் படுத்துதலுக்கு ஒப்பானதாகும். இந்த நாடுகளுக்கான தரவரிசையில் அமெரிக்காவின் வணிகம், குடியுரிமை, சுற்றுலாத்துறை, கல்வி, மற்றும் நிர்வாகக் கூட்டுறவு போன்ற பிரிவுகளில் கடந்த வருடத்தை விட அமெரிக்கா பின்னடவை சந்தித்துள்ளது. மேலும் புள்ளி விபரம் மேற்கொள்ளப் பட்ட 75% வீதமான முக்கியஸ்தர்கள் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் அந்நாட்டு தலைமைத்துவம் மீதான மரியாதையைத் தாம் இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைத் தவிர்த்து ஜேர்மனியும் வணிகத்துக்கான கதவுகள், குடியுரிமை மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற விடயங்களில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கடந்த வருடம் அந்நாடு சந்தித்த பல தீவிரவாதத் தாக்குதல்களும் கூறப்படுகின்றது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் 3 இடங்கள் ஜேர்மனியும் பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 60 நாடுகள் உள்ளடக்கப் பட்டிருந்த இந்த புள்ளி விபரம் இவ்வருடம் 2017 இல் 80 நாடுகளை உள்ளடக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


0 Responses to உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா பின்னடைவு!: சுவிட்சர்லாந்து முதலிடம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...