Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹூஸ்டன்(யு.எஸ்): ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை
அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமெரிக்கத் தமிழர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். அமைச்சரோ இடம் தேர்வு செய்து கொடுத்தது தமிழக அரசுதான்
என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைநகரமாக
விளங்கும் ஹூஸ்டன் நகருக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வருகை
தந்துள்ளார். அங்குள்ள பெட்ரோலிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மற்றும்
ஒப்பந்தங்களுக்காகவே வந்துள்ளார் எனத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சருடன் அமெரிக்க இந்தியர்களின் நேர்முகச்
சந்திப்பிற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தமிழர்கள்
சுமார் 100 பேர் அமைச்சரை சந்திக்கச் சென்றனர்.

அரங்கத்திற்குள் இடவசதி இல்லாததாலும், ஏற்கனவே மற்றவர்களுக்கு அனுமதி
அளித்துள்ளதாலும் பத்து தமிழர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் விவரம்
தெரிந்ததால் தான் சொல்கிறோம்.

பெருமாள், பாலாஜி, நீல் ஆம்ஸ்ட்ராங், சுனில் , சத்யா மற்றும் ராஜா
ஆகியோர், அமைச்சரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மனுவை
வழங்கினார்கள்.

மனு அடங்கிய ஃபைலை திறந்து பார்த்தவருக்கு ஸ்டாப் ஹைட்ரோ கார்பன் என்ற
தலைப்பைப் பார்த்ததும் முகம் மாறிவிட்டது.

சாதாரண சந்திப்பு என்று எண்ணியிருந்த அமைச்சருக்கு தமிழர்களின்
கோரிக்கையைப் கேட்டதும் முகம் மாறிவிட்டது.

அமெரிக்காவின் பெட்ரோலியத் தலைநகரில் வேலை பார்க்கும் நீங்கள் இந்தக்
கோரிக்கையை முன் வைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள்
மாநிலமும், இந்தியாவும் வளம் பெற வேண்டாமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

இங்கே பெட்ரோலிய நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் அனுபவத்தைக் கொண்டு
தான், இந்த திட்டம் தமிழகத்திற்கு கேடு என்று உறுதியாகச் சொல்கிறோம்.
எரிவாயு நிறுவனங்களால் என்னென்ன பாதிப்புகள் என்பதை நன்றாகவே அறிந்து
வைத்துள்ளோம். ஆகவே தமிழகத்திலிருந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ்
பெறுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

தமிழர்களின் அழுத்தமான வாதத்தை எதிர்கொள்ள முடியாத அமைச்சர், பழியை தமிழக
அரசு மீது திருப்பி இருக்கிறார். தற்போதைய ஆளும் அரசுதான் இந்த இடங்களைத்
தேர்வு செய்து கொடுத்தது. எதிர்க்கட்சியின் ஸ்டாலினும் தமிழக அரசைத்
தடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் எதிர்க்கட்சித்
தலைவர் ஸ்டாலின் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

நீங்கள் உங்கள் மாநில அரசைத்தான் கேட்க வேண்டும். எங்களுக்கு மாநில அரசு
கொடுத்த இடத்தைத்தான் நாங்கள் கையகப்படுத்தியுள்ளோம் என்று கையை விரித்து
இருக்கிறார்.

விடாத தமிழர்கள், அரசியல்வாதிகளுக்கு இந்த திட்டத்தின் பாதிப்புகள் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. மாநிலத்திற்கு வருவாய் வேலைவாய்ப்பு என்று மட்டும்
எண்ணியிருப்பார்கள். அந்தத் துறையில் வேலைபாரக்கும் நாங்கள் சொல்கிறோம்.
இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம், தமிழகத்தின் நீர் ஆதாரத்தை
பாழ்ப்படுத்தும், விவசாயத்தை அழிக்கும், மக்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படும், மேலும் சுற்றுச்சூழல் மாசுபடும். ஆகவே மத்திய அரசு
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் என்று மீண்டும்
வலியுறுத்துகிறோம் என்று வாதிட்டுள்ளனர்.

அப்போதும் விடாத அமைச்சர் பிரதான், இந்தியாவில் எரிவாயு, பெட்ரோலியத்
துறையில் எந்தவித விபத்துகளும் ஏற்பட்டதில்லை. பிரத்தியேகமான தொழில்
நுட்பங்களை பயன்படுத்துகிறோம். ஆகவே பாதுகாப்பு குறித்தோ, பாதிப்புகள்
குறித்தோ அச்சம் தேவையில்லை என்றிருக்கிறார்.

கப்பலிலிருந்து எண்ணெய் கடலில் கொட்டிய போது மத்திய அரசிடம் இருந்த
மிகப்பெரிய டெக்னாலஜியான ‘பக்கெட் டெக்னாலஜியை’ உலகமே பார்த்து வியந்தது
அல்லவா! ஹைட்ரோ கார்பன் விஷயத்தில் பக்கெட் உதவாது அமைச்சரே என்று பதிலடி
கொடுத்துள்ளனர். அதைக் கேட்ட அமைச்சரின் முகத்தில் ஈயாடவில்லை.

விவகாரம் முற்றுவதைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள், அடுத்த
சப்ஜெக்ட் பற்றி பேசலாம் என்று திசை திருப்பி விட்டனர்.

மற்றவர்களிடம் பேசி முடிந்த பிறகு, அமைச்சரே தமிழர்களை மீண்டும் மேடைக்கு
அழைத்துள்ளார். ‘ஹூஸ்டன் நகரிலிருந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு
எதிர்ப்பு வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. உங்களின் நேர்மையான
கோரிக்கையை பாராட்டுகிறேன். என்னால் முடிந்ததை செய்ய முயல்கிறேன்’ என்று
சமாதானம் செய்துள்ளார்.

மத்திய அமைச்சரிடம் நேருக்கு நேராக மிகவும் அழுத்தமாக ஹைட்ரோ கார்பன்
திட்டத்திற்கான எதிர்ப்பை அமெரிக்கத் தமிழர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழர்கள் கொடுத்த விரிவான தகவல்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் அமைச்சர்
கையில் எடுத்துச் சென்றுள்ளார்.

0 Responses to வேண்டாம் ஹைட்ரோ கார்பன்:அமெரிக்க தமிழர்கள்

Post a Comment

Followers