Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார்.

விமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாக தடுமாறுகிறார். கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள்.

கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டங்கள் எந்தவித தீர்வும் இன்றி ஒரு மாத காலம் தாண்டியும் தொடர்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களின் ஒரு கட்டம் கிளிநொச்சியில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டங்களை நோக்கி கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக மக்கள் பெருவாரியாக வருகிறார்கள். தார்மீக ஆதரவு என்கிற நிலையோடு ஒதுங்கிக் கொள்ளாமல், போராட்டத்தின் பங்காளிகளாக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியத் தளத்துள் இயங்கும் பல தரப்புக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றன. போராட்டம் தொடர்பிலான அணுகுமுறையும் மாறியிருக்கின்றது. அரசியல்வாதிகள் முன்னிலை வகிக்க போராடிக் கொண்டிருந்த மக்கள், இன்று அவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கின்றார்கள். போராட்டங்கள் ஏற்படுத்தும் அழுத்தத்தின் அளவும் இதனால் அதிகரித்திருக்கின்றது. அது வாக்குறுதிகள், கால அவகாசங்கள் என்கிற வழக்கமான பரிகாசங்களினால் ஏமாற்றப்பட முடியாதவை என்கிற கட்டத்தினையும் கண்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (பெப் 22) ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய சம்பந்தன், இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தை உள்வாங்கிப் பிரதிபலித்தார். மக்களை நோக்கி தங்களால் செல்ல முடியவில்லை என்கிற நிலையையும் வெளிப்படுத்தினார். மைத்திரி- ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையின் அளவினை அவர் வெகுவாக குறைத்துக் கொண்டு ஏமாற்றமான தொனியில் விடயங்களை அடுக்கிச் சென்றார். ஒரு கட்டத்துக்கு மேல், அரசாங்கத்தின் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அகற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் சார்ந்தவை என்ற தொனியிலும் பேசினார்.

மைத்திரி- ரணில் அரசாங்கம் மீதான நம்பிக்கை வார்த்தைகளை சம்பந்தன் இழப்பதற்கான அழுத்தத்தினை மக்களே இன்று ஏற்படுத்தியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் முன்னெடுத்து வந்த அனைத்துப் போராட்டங்களிலும் அரசாங்கத்தோடு நேரடியாகப் பேசும் தரப்பாக கூட்டமைப்பே இருந்து வந்திருக்கின்றது. மக்களும் அதனை அனுமதித்து வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பேச்சுக்களினால் எந்தவித நல் அறுவடையும் கிடைக்காத நிலையில், மக்கள் இன்றைக்கு கூட்டமைப்புக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தும் போராட்ட வடிவத்தினை கைகளில் எடுத்திருக்கின்றார்கள். அது, அரசாங்கத்துக்கு எவ்வளவு அழுத்தத்தினை வழங்குகின்றதோ, அதேயளவுக்கான அழுத்தத்தினை கூட்டமைப்பு மீதும் கொடுக்கின்றது. இது, ஏக நிலையில் தன்னுடைய இருப்பினை வைத்துக் கொள்ள நிலைக்கும் கூட்டமைப்புக்கு பெரும் சிக்கலானது. இப்படியான தருணம் நீடித்துச் செல்லுமாக இருந்தால், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுச் சக்திகளுக்கான வாய்ப்புக்களை அது ஏற்படுத்தி விடும் என்றும் சம்பந்தன் அச்சம் கொள்கின்றார். அதுதான், சுமந்திரனின் கோபத்துக்கும் காரணம்.

கூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானத்தினை சிதைப்பதில் தென்னிலங்கை பெரும் ஆர்வத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பினை அகற்றம் செய்வதற்கான கட்டங்கள் மிரட்டல், பிரித்தாளும் தந்திரம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் அரங்கேற்றப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இன்றைய நாட்களிலும் அந்த நிலையே வேறு வடிவங்களில் தொடர்கின்றது. அது, பாராளுமன்றத்துக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் ஒரே அணியில் அழுத்தம்(!) கொடுக்கும் தமிழ்த் தேசிய அணியொன்று இருப்பதை அச்சுறுத்தலாக உணரும் போக்கிலானது. தென்னிலங்கையில் அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், பௌத்த சிங்கள நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது வரலாறு. அதன்போக்கிலானதே கூட்டமைப்பினை சிதைப்பதற்கான ஏற்பாடுகளும்.

கடந்தகால ஏமாற்றங்களைத் தாண்டியும் தேர்தல்களில் கூட்டமைப்பினை ஒரே தெரிவாக தமிழ் மக்கள் மீளவும் முன்மொழிந்திருக்கின்றார்கள். இந்த நிலையில், அதன் திரள்வு சிக்கலானதுதான். அது, தென்னிலங்கையில் பிரித்தாளும் ஏற்பாடுகளுக்கு ஏதுவானவை அல்ல. ஆக, கூட்டமைப்பின் சிதைவு தென்னிலங்கைக்கு இப்போது அவசியமானது. அவசரமானது. அதற்காக, தமிழ் மக்களிடையே கூட்டமைப்பு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் தேவையும் அரசாங்கத்துக்கு உண்டு.

காணி மீட்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளில் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு பாராளுமன்றத்துக்குள்ளும் சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுத்து உரையாடி வந்திருக்கின்றது. அதனால் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்களும் உண்டு. ஆனால், அந்த அழுத்தங்களினால் தாம் இணங்கிய விடயங்கள் சார்பிலான பலன் கூட்டமைப்பினை சேராக்கூடாது என்பதிலும் அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது. ஆக, இணங்கிய விடயங்களை இழுத்தடித்து மக்களை எரிச்சல் படுத்தி ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டமைப்பை அந்த இடத்திலிருந்து விலக்கிவிட்டு தானாகவே வழங்குவது போன்ற தோரணையில் அரசாங்கம் செயற்படுகின்றது.

சின்ன உதாரணம்; கடந்த வருடம் கிளிநொச்சி பரவிப்பஞ்சானில் தமது காணிகளைக் கோரி போராட்டதினை முன்னெடுத்து வந்த மக்களிடம் சம்பந்தனைக் கொண்டு வாக்குறுதியை வழங்க வைத்துவிட்டு அரசாங்கம் நீண்ட இழுபறியில் விட்டது. மக்கள் கோபப்பட்டு மீண்டும் போராட்டத்தினை அண்மையில் ஆரம்பித்த போது, அதில் கூட்டமைப்பினால் பங்களிக்க முடியாமல் போனது. கூட்டமைப்பினை அந்தத் தளத்திலிருந்து அகற்றிவிட்டு, மக்களின் கோரிக்கைக்கு இணங்கியது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்திவிட்டு காணிகளை விடுவித்திருக்கின்றது.

(இந்தப் பத்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணியளவில் எழுதப்பட்டது. அதன்பின்னரான மாற்றங்களை கட்டுரை உள்ளடக்கவில்லை)

கேப்பாபுலவு போராட்டக்களத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வந்து செல்கின்றார்கள். ஆனால், அரசாங்கத்தினை நம்பி வாக்குறுதிகளை வழங்க முடியவில்லை. போராட்டக்களத்திலிருந்து தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தனோடு தொலைபேசியில் மக்களை உரையாட வைத்தார். அப்போது, சம்பந்தன், கடந்த வருடத்தில் பரவிப்பஞ்சான் விடயத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் படி நடந்து கொண்டார். அதாவது, மக்களிடம், “பிரதமர், பாதுகாப்பு அமைச்சக மட்டத்திலும் ஏற்கனவே பேசியாகிவிட்டது. ஆனாலும், பலன் இல்லை. ஜனாதிபதியுடன் பேச இருக்கிறேன்.” என்றார். ஆனால், அவர் எந்தவொரு கட்டத்திலும் போராட்டத்தினை கைவிடக் கோரவில்லை. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு காணி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது. சில நாட்களுக்குள் தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியும் அளித்திருக்கின்றார். அதனை ஊடகங்களினூடு வெளிப்படுத்திய சம்பந்தன், காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்கிற விடயத்தினையும் வலியுறுத்தியிருக்கின்றார்.

மக்களின் குரல்களை மீறிச் சென்று எந்தவித அரசியலையும் செய்ய முடியாது என்பதை ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டிருக்கின்ற சம்பந்தன் உணராமல் இல்லை. அவர், இன்றைக்கு அந்தப் போக்கின் பக்கத்திற்கு நகர ஆரம்பித்திருக்கின்றார். அது, மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கூட்டமைப்பு இயங்கிய கட்டங்களை நோக்கி நகர்வினை ஒத்ததாக எதிர்காலத்தில் இருக்கலாம். ஏனெனில், தமிழ்த் தேசியத் தளத்துக்குள் இருக்கும் பல தரப்புக்களின் விமர்சனங்களையும் மீறி குறிப்பிட்டவான நெகிழ்வுப் போக்கோடு புதிய அரசாங்கத்தோடு சம்பந்தன் இருந்திருக்கின்றார். ஆனால், அவர் இரண்டு விடயங்களில் அதிகமாக ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார். அதில், முக்கியமானது, புதிய அரசியலமைப்பினூடு உறுதி செய்யப்படும் என்று நம்பிய அரசியல் தீர்வு. மற்றையது, ஐக்கிய நாடுகளில் இலங்கை இணங்கிய பொறுப்புக்கூறலுக்கான விடயம்.

புதிய அரசியலமைப்புப் பணிகள் கடந்த வருடம் நிறைவுக்கு வந்து, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொது வாக்கெடுப்போடு நிறைவேற்றப்படும் என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்பினார்கள். அதனையே, ரணிலும் அவர்களிடம் பெரும் நம்பிக்கையாக விதைத்திருந்தார். ஆனால், தென்னிலங்கையோ இன்றைக்கு புதிய அரசியலமைப்பு என்கிற விடயத்தினை கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டது. அதனை நம்பி தொடர்ந்தும் வாக்குறுதியளித்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் மக்களின் கேள்விகளினால் அவஸ்தைப்படுகின்றார்கள். தென்னிலங்கையினால் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார்கள். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அரசியல் உரையாடல் நிகழ்வொன்றின் போதும் தயான் ஜயதிலக்கவுக்கு பதிலளிக்கும் போது சுமந்திரன் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்னொரு பக்கம், ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பித்திருக்கின்றது. அங்கு மீண்டுமொரு 18 மாத கால அவகாசத்தினைக் கோரி இலங்கை நிற்கின்றது. அது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாதங்களில் இலங்கை அரசாங்கம் எந்தவித ஏற்பாடுகளையும் செய்திருக்கவில்லை. ஒப்புக்கு காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைக்கும் சட்டமூலத்தினை நிறைவேற்றியது. ஆனால், அதிலும் திருத்தங்களைச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு முனைப்புக் காட்டுகின்றது. ஆக, எந்தப் பக்கத்தால் சென்றாலும், நியாயமான சில அடைவுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நம்பியிருந்த சம்பந்தனும் சுமந்திரனும் ஏமாற்றத்தின் புள்ளியில் நிற்கிறார்கள். அதனைத் தாண்டி ஓடுவதற்கு மக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில், மக்களின் பக்கமே அவர்களும் வர விரும்புகிறார்கள்!

4TamilMedia

0 Responses to ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்! - புருஜோத்தமன் தங்கமயில்

Post a Comment

Followers