Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சந்தை கடைத் தொகுதி ஒன்றின் மீது மர்ம நபர்கள் லாரியை ஓட்டிக் கொண்டு வந்து மோதி நிகழ்த்திய தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும் இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை 2 பேர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் சுவீடன் போலிசார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் லாரி ஓட்டுனர் ஆவார்.

மேலும் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வென் கருத்துத் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் தொடுக்கப் பட்ட பின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிசாரால் பொது மக்கள் அப்புறப் படுத்தப் பட்டதுடன் அருகில் இருந்த ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் என்பன தற்காலிகமாக மூடப் பட்டன. முன்னதாக கடந்த சில வருடங்களில் இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் தீவிரவாதிகள் வாகனங்களை வேகமாக ஓட்டி வந்து பொது மக்கள் மீது மோதித் தாக்குதல் நடத்தி வந்தது போன்ற அதே பாணியில் தற்போது சுவீடனும் இலக்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உணவு விடுதி ஒன்றின் அருகே இருந்து லாரி கடத்தப் பட்டு குறித்த அங்காடித் தொகுதி மீது மோதப் பட்டதாகவும் லாரியின் உள்ளே வெடிபொருட்கள் இருந்ததாகவும் உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் கைதான லாரி ஓட்டுனரின் திட்டம் என்னவாக இருந்தது என்பது குறித்து போலிசார் இதுவரை தெரிவிக்காத போதும் தற்போது அவர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றார். சுவீடனின் எல்லைப் பகுதிகளில் தற்போது பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளது. மேலும் இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. உலக நாடுகளில் நடுநிலை வகித்து வரும்  சுவீடன் கிட்டத்தட்ட 200 வருடங்களாக எந்த ஒரு உலக யுத்தத்திலும் பங்கேற்றதில்லை. ஆனால் சுவீடனின் இராணுவம் உலகின் குழப்ப நிலை நிலவும் பகுதிகளான ஈராக், மாலி மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் ஐ.நா இன் அமைதி காக்கும் முயற்சிகளில் பங்கேற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுவீடன் லாரி தாக்குதலில் 5 பேர் பலி : இருவர் கைது

Post a Comment

Followers