Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருப்பது, ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன் ஊடக அறிக்கையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதெனவும் அது இறுதி யுத்தத்தின் போது அதிகளவில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை குழுவால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஏனைய நல்லிணக்க பொறுமுறைகள் உட்பட ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தணைகளை நிறைவேற்றவும் இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தது.

இவ்வறான நிலையில் அரசு ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் நிபந்தனைகளுக்கு இணைந்து கால அவகாசத்தையும் பெற்றுள்ள இவ்வேளையில் போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் மிப்பெரிய பொய்யொன்றை முக்கிய அமைச்சராக உள்ள ராஜித தெரிவித்துள்ளார்.

இதற்கும் அப்பால், இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்வது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சகல உரிமையையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்று வடக்கு கிழக்கில் பாரிய நில மீட்பு போராட்டங்களும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் இடம்பெற்றுவரும் நிலையில் எதனை சாதித்துவிட்டதாக அரசு பறைசாற்ற முயல்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

எனவே தெற்கில் ஓர் கதையும் வடக்கில் ஓர் கதையும் பேசும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐநாவின் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுக்கின்றதா? என்பது தொடர்பில் குறித்த காலப்பகுதிக்கொருமுறை ஆய்வை மேற்கொண்டு இலங்கை அரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.” என்றுள்ளது.

0 Responses to போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று ராஜித சேனாரத்ன கூறுவது ஐ.நா.வை ஏமாற்றும் செயல்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...