Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எங்களுடன் சேர்ந்து புத்தாண்டை அனுஷ்டிக்கும், எமது சிங்கள சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனம் மிக மகிழ்கின்றேன்.

எமது தமிழ் வருடங்கள் அறுபதாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் தாங்கியுள்ளதுடன், அவை மழை, காற்று, பயிர்வளம் போன்ற இயற்கையின் பலாபலன்களை மாற்றி அமைக்கும் தன்மையினைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. அந்த வருடங்களின் வரிசையில் 31வது வருடமான ஏவிளம்பி வருடம் இவ்வருடம் சித்திரை மாதம் 14ஆம் திகதியாகி பிறக்கின்றது.

புத்தாண்டு நன்னாளில் எம்மவர்கள் தமது பாவங்கள், தோஷங்கள் நீங்க வேண்டி, மருந்துவகை, மலர் வகை மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு ஆலய அர்ச்சகர்களால் காய்ச்சப்படும் மருத்துநீரைத் தலையிலே தேய்த்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, உலகின் கண்கண்ட தெய்வமாய் விளங்கும் சூரிய பகவானுக்கு இல்லங்களில் பொங்கலிட்டு பூசை செய்து, ஆலய வழிபாடு செய்து, குரு, பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெற்று, அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்திருப்பது பாரம்பரிய மரபாகும்.

அன்றைய நாளில் அவ்வாறு நடந்து கொள்வதனால் அந்த வருடம் முழுவதும் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகமாகும்.

புத்தாண்டு பிறக்கும்போது மக்கள் மனங்களில் எதிர்பார்ப்புக்கள் பல உண்டாவது இயல்பானதாகும். அவ் எதிர்பார்ப்புக்களில் பிரதானமாக இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் வகையில் அமையவேண்டுமெனவும், அவ் அரசியலமைப்பு இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்திட வேண்டுமெனவும், அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலவேண்டுமெனவும் இப்புத்தாண்டு நன்னாளில் இறையருளை இறைஞ்சுவோம்.

அதுபோல தமிழ்மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையையும் இவ்வேளையில் வெளிப்படுத்துகின்றேன்.

இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனத்தவரான தமிழ்மக்களுக்கும் பொதுவான புத்தாண்டாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். இப்புத்தாண்டை ஈரினத்தவர்களும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் நல்லுறவுடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும்.

அந்த வகையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு சாந்தி, சமாதானம் மேலோங்கி இந்நாடு அமைதிப் பூங்காவாக மிளிர்ந்திட, பிறக்கும் ஏவிளம்பி புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com