Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய தேர்தல் முறை மாற்றத்தோடு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என்று நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘மார்ச் 12’ இயக்கம் வாக்காளர்களை தெளிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த அறிவூட்டல் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முறை அன்று உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் ஆணைக்குழு தனது கடமைகளை சரிவர மேற்கொள்ளாதமையின் பெறுபேறுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம்.

இந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் செயற்பாடுகள் பக்கச்சார்பின்றியும், சுயாதீனமாகவும் நடைபெறாமையே உள்ளூராட்சி சபை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான பிரதான காரணமாகும்.

எவ்வாறாயினும் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மீண்டும் குழுவொன்றினை நியமித்து தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகளுக்கு அவசியமான தொடக்கமாக இதனைக் கருதுகிறேன். நாட்டிலும், சமூகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களின் தொடக்கமே இது.

1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு முறையினால் கட்சிகளின் அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் மறைக்கப்பட்டு தனிநபர்களின் செல்வாக்கு மேலோங்கியது. புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மற்றும் தொகுதி முறை தேர்தல் என்பன நாட்டு மக்களின் வெற்றியாகும்.” என்றுள்ளார்.

0 Responses to தேர்தல் முறை மாற்றத்தோடு உள்ளூராட்சித் தேர்தல்களை வருட இறுதிக்குள் நடத்த முடியும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...