Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்களாலும் யுத்த வடுக்களாலும் நிலையிழந்து இன்று இருக்கின்றது ஓர் ஊர். அங்கு வாழ்ந்தவர்கள் மறத்தமிழர்கள்.

இல்லை என்போரை தேடிச்சென்று உதவும் நல்மனம் படைத்தவர்கள். அதாவது “வந்தாரை மட்டும் அல்ல வைதாரையும் வாழவைக்கும் குணம் கொண்டவர்கள்”.

அவர்கள் வாழ்ந்த இடங்களும், மக்களும் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட, வேறு வழியின்றி வாழ்விடம் தேடி பிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து பறந்து சென்றனர்.

இங்கு சொல்லப்பட்டது எப்போதே இயற்றப்பட்டது. ஆனால் நம் மனம் இதனை படிக்கும் போது தமிழீழத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கும் என்பதில் எதுவித மறுப்பும் இல்லை.

தமிழர்களின் இலக்கியங்கள் என்பன தீர்க்க தரிசனங்களாகவே நோக்க முடியும். காரணம், எப்போதே எழுதிய தமிழ்ச் சுவை திகட்டும் இலக்கியப் படைப்புகளில் எதிர் காலத்தை கண் முன் கொண்டு வந்து விட்டான்.

அந்தவகையில் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய தம் பட்டினப்பாலையில் பாடல்கள் பல விடயங்களை மீட்டிப் பார்க்க வைக்கின்றது.

பட்டினப்பாலை சங்க கால பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . இது அப்போதைய சோழ நாட்டின் சிறப்பு, அதன் தலைநகர் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வம், கரிகாலனின் வீரத்தோடு அங்கு வாழ்ந்த மக்களில் வாழ்வு முறையையும் கூறுகின்றது.

இலக்கிய நயத்தோடு இதனை வடித்தவர் நிச்சயமாக எதிர்காலத்திற்கும் பொருத்தமாய் அமையும் என்பதனை அப்போது நினைத்துப் பார்த்திருப்பாரா?

அதில் வரும் பாடல் ஒன்று..

“கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்
ஒண்சுவர் நல்இல் உயர்திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழுநகர்த்
தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக்
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட
உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய” என்கின்றது.

இது அப்போது இலக்கியமாகப் பட்டது. தமிழ்ச் சிறப்பை காட்டுவதாய் அமைந்தது ஆனால் இதனைப் படிக்கும் போது.,

ஈழமும் கூட சிந்தையில் வந்து விட்டுப் போவது கவிஞரின் குற்றமாகாது, காலத்தின் விளையாட்டு என்றும் கூட இதனைக் கூறலாம். இப்பாடல் கூறுவதை சாரமாக கூறவேண்டுமானால்.,

அங்கே வளைந்த தூண்களை கொண்ட மாடத்தின் நீண்ட வாசலில் கூடி நின்று, விருந்தினர் இடைவிடாமல் விருந்து உண்பர். விருந்தினர் உணவு உண்ணும் வகையில் சமையல் செய்யும் இடங்களில் பெருஞ்சோறு குறைவில்லாமல் இருந்து கொண்டே இருக்கும்.

அப்படியான வீடுகள் சுறையாடப்பட்டு, விலை நிலங்கள் எரிக்கப்பட்டதால் பிறந்த மண்ணைவிட்டு மக்கள் பாதுகாப்பான இடம்தேடி நகரத் தொடங்கினர்.

போரினால் சிதைந்து நிலைமாறிப் போன இதுபோன்ற வளமான ஊர்களைப் பாலை நில திருடர்கள் வந்து கொள்ளையடித்து போவர்.

நாட்டை காத்து நின்ற மன்னனும், அவன் பின் நின்ற காவல்வீரர்களும் போரில் அழிக்கப்பட அரணற்ற நிலையில் ஊர்மக்கள் தவித்திருக்கும் போது.,

கொடிய வில்லை கொண்ட வேடர் கூட்டமாகச் சென்று மக்கள் இல்லாத வீடுகளைக் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கின்றனர்.

இவ்வாறாக எழிலோடு வளம் கொண்ட இடங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதையும் அம் மக்களில் அவலத்தையும் கண்முன் காட்டுகின்றது பட்டினப்பாலை.

அப்படியான ஓர் கொடூர நிலை அந்த ஊருக்கு ஏற்படுத்தப்பட்டும் கூட பிறந்த மண் பற்றுக்கொண்ட சிலர் கொடிய வறுமையோடு கூடிய துயர் வடுக்களையும் தாங்கியவாறு அந்த ஊரிலேயே தங்குகின்றார்கள்.

அப்படி தங்கிய பெண் ஒருத்தி போரில் இறந்துபோன, வீரர்களுக்காக நடப்பட்ட நடுகல்லை நாள்தோறும் வணங்கிக் கொண்டு வருகின்றாள்.

காணாமல் போன தலைவன் மீண்டும் வருவான் என்பது அவள் கொண்ட நம்பிக்கை. அதனால் நடு கல்லை தொடர்ந்தும் வழிபட்டு வருகின்றாள்.

திருவிழாக் கோலமாக இருந்த ஊர் சுடுகாடு போல மாற்றப்பட்டு போய் விட்டது. அங்கிருந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

அந்த ஊரைவிட்டுச் சென்றவர்களை மீண்டும் வரவழைத்து தான் விருந்து தரவேண்டும் என வேண்டிக்கொண்டு நடுக் கல்லை வழிபடுகிறாள் அப் பெண்.

போரில் ஏற்பட்ட இழப்பை, போரைக்கொண்டே சரிசெய்ய வேண்டும் என்ற ஓர் வைராக்கியம் அப்பெண்ணுக்குள் ஏற்பட்டுள்ளது வியப்புக்குரிய விடயம் தான் இது.

எனினும் இந்த முறை வெற்றி என்பது உறுதி என்ற துணிவு, திடம், நம்பிக்கை, வைராக்கியம் அந்தப் பெண்ணிடம் இருக்கின்றது எனவும் பட்டினப்பாலை கவி உரைக்கின்றார்.

இப்படி பட்டினப்பாலை கூறும் பாடல்கள் பலவும் இப்போது எதுவோ ஒன்றை கண் முன் காட்டுவதாய் அமைந்து போகின்றது.

இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பதனை மறுக்க முடியாது. ஒரு காலத்தில் நடந்த கதையாக இதனை அப்போதைய கவி பாடினார்.

இந்த கதையை நவீனத்தோடு இணைத்துப் பார்க்கும் போது, இப்போதும் அப்போதும் சேர்ந்து தமிழர்களை கண்முன் காட்சிகளாக பிரதிபளிக்கின்றது.

அதில் கூறிய நடுகல் வழிபாட்டினை இப்போதும் வடக்கு கிழக்கிலும் தொடர்கின்றார்கள். அத்தோடு அதே நம்பிக்கையும் கூட வடக்கு தமிழர்களின் நெஞ்சத்தில் விதைக்கப்பட்டு இருக்கலாம்.

தொன்று தொட்டு இது நடந்து கொண்டே தான் வருகின்றது. என்றாலும் எப்போதாவது ஓர் நாள் நிச்சயம் தலைவன் மீண்டும் வந்து இழந்தவற்றை மீட்டுக் கொடுப்பான் என்ற நம்பிக்கை.,

சங்ககால மக்களிடம் மட்டும் அல்ல இப்போதைய தமிழர்களின் மனதிலும் கூட இருக்கத்தான் செய்கின்றது. அது அரசியல் மூலமாகவா? அல்லது ஒன்றிணைத்த தலைமை மூலமாகவா? பதிலை காலம் மட்டுமே கூறும்.

ஒன்று கூறலாம் பண்டைய காலத்தில் எதிர்க்க தழிழனைத் தவிர வேற்றார் குறைவு. அதனால் தமிழனுக்கு எதிரி தமிழனாகவே இருந்தான். அனால் இப்போதைய நிலை மாற்றப்பட்டப்பட்டு விட்டது.

ஆனால் இன்றைய சூழலில் தமிழனுக்கு தமிழனோடு சேர்ந்து பகடை ஆடும் பகைவர்களுக்கு மட்டும் எவ்வகையிலும் பஞ்சம் இல்லை.

என்றாலும் கூட தமிழ் இனத்திடையே ஒற்றுமை மட்டும் இருப்பின் எத்தனை பகைவர் வந்தாலும் ஊதித் தள்ளி விட்டு முன்னேறிச் செல்லலாம். உரிமைகளை பெற்றுக் கொள்வதோடு தலைநிமிர்ந்தும் நடக்கலாம்.

ஆனால் ஒற்றுமை என்ற பதத்தை மட்டும் அல்ல நிஜத்திலும் அதனை தேடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அல்லது தள்ளி விடப்பட்ட நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதும் கூட காலத்தின் விளையாட்டே.

0 Responses to போரில் அழிக்கப்பட்டது மறத்தமிழர்கள் நாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com