Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகளும் கரிசனைகளும் சென்று சேர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“எம்முடன் இந்த நாட்டில் வாழப்போகும் சிங்கள மக்களுக்கு எமது கருத்துக்கள், கரிசனைகள், கவலைகள் சென்றடையவில்லை. தெற்கில் எமது நிலை அறிய, எமது கலை அறிய, எமது கவலையில் பங்குகொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை காலமான இன ரீதியான முறுகல்கள் எமது பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது என்ற ஒரு காரணம் அவர்களுக்கு கவலை அளிக்கின்றது.

உண்மை நிலையை ஊக்கமுடன் செயற்பட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் நாடு கொள்ளாது என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் அந்த மக்கள் சக்தியுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் எமது கவலைகளை, கரிசனைகளை, கட்டாயத் தேவைகளை எடுத்துரைக்கவேண்டிய ஒரு கட்டம் பரிணமித்துள்ளது என்பது எனது கருத்து.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம் திருகோணமலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இணைத் தலைவர் உரை ஆற்றும் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் உரை தொடர்பிலான ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“எமது (தமிழ் மக்கள் பேரவை) நடவடிக்கைகள் மூவின மக்கள் கூட்டங்களை நோக்கியதாக அமைய வேண்டும். ஒன்று எமது மக்கள். மற்றையது சிங்கள மக்கள். மூன்றாவது பன்னாட்டு மக்கள். இவர்கள் மூவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய வேண்டும்.

எம்முடன் இந்த நாட்டில் வாழப்போகும் சிங்கள மக்களுக்கு எமது கருத்துக்கள், கரிசனைகள், கவலைகள் சென்றடையவில்லை. தெற்கில் எமது நிலை அறிய, எமது கலை அறிய, எமது கவலையில் பங்குகொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை காலமான இன ரீதியான முறுகல்கள் எமது பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது என்ற ஒரு காரணம் அவர்களுக்கு கவலை அளிக்கின்றது.

உண்மை நிலையை ஊக்கமுடன் செயற்பட்டு அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் நாடு கொள்ளாது என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் அந்த மக்கள் சக்தியுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் எமது கவலைகளை, கரிசனைகளை, கட்டாயத் தேவைகளை எடுத்துரைக்கவேண்டிய ஒரு கட்டம் பரிணமித்துள்ளது என்பது எனது கருத்து.

மக்கள் எமது கருத்துக்களை அறிய ஆர்வமாக இருந்தாலும்கூட சிங்கள ஊடக உரித்தாளர்களை அல்லது ஆசிரியர்களை கொண்ட ஆங்கில நாளேடுகள்கூட எமது கருத்துக்களை சிங்கள மக்களிடம் சென்றடைய விடமாட்டா போலத் தெரிகின்றது. தமிழ் மக்களை அண்டி அவர்களின் பிரச்சினைகனை அறியும் அதேநேரம் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் அதேநேரம் சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தல்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தல் எமக்கு அவசியமாகியுள்ளது.

முன்னர் கட்சிகள் சார்ந்த சில ஒத்துழைப்புக்கள் இருந்து வந்தன. ஆனால் இப்போது கட்சி பேதம் இன்றி சிங்கள மக்கள் யாவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய நாம் வழிவகுக்கவேண்டும்.

ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஜனநாயக முறையில் எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதி பூண்டுள்ளோம். ஜனநாயகம் மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் மனமாற்றத்திற்கு ஆளானால்தான் இங்குள்ள எமது மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படலாம். இது ஜனநாயகத்தின் அவசியப்பாடு.

இங்கு நாங்கள் எமது சிந்தனைகளின் போக்கைச் சிறிது அறிந்து வைத்திருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் பண்டமாற்று அடிப்படையிலேயே தமது உரிமைகளைப் பெற்றெடுத்து வருகின்றார்கள். இன்று நாம் உங்களுக்கு இந்திந்த உதவியை அளித்தால் இவ்விவற்றை நீங்கள் எமக்கு தருவீர்களா? என்று கேட்டுப் பெற்று வருகின்றார்கள்.

எமது பாரம்பரிய ஆணவமும் மிடுக்கும் அவ்வாறான பண்டமாற்றத்தை வரவேற்பதில்லை. இதில் பிழை இல்லை. ஆனால் உண்மை நிலை என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

இவ்வளவு வீராப்பு பேசும் நாங்கள் வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றோம். இங்கு எமக்குப் பக்கபலம் இல்லை. அங்கு பணபலம் இருக்கின்றது. ஆனால் இங்கு பக்குவமாகப் பேசக்கூடிய பாங்கு எமக்கு இல்லாதிருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகளுக்கு நான் எதிரானவனல்லன். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் உரிய பயன்பாட்டை எமக்கு நல்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். எதற்கும் சிங்கள மக்களுடன் எமக்கு ஒரு கருத்துப் பரிமாற்ற யன்னல் அமைக்கப்பட்டால் அது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

என்னை காண வரும் வெளிநாட்டவர்கள் இலங்கை அரசால் மூளைச் சலவை செய்யப்பட்டே வருகின்றார்கள். அவர்களின் கேள்விகள் அதனைப் பிரதிபலிக்கின்றன.

நேற்றைக்கு முன் தினம் துருக்கி தூதுவர் சுமூகமான தீர்வு வருவதற்கு நான் இடைஞ்சலாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார். ஏன் கூட்டாட்சியை முன்னிலைப் படுத்துகின்றீர்கள் என்று கேட்டார். ஏன் வடக்கு கிழக்கை இணைக்கக் கேட்கின்றீர்கள் என்று கேட்டார். கூட்டாட்சி செக்கோஸ்லாவாக்கியா, யுகோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளில் பிரிவினைக்கு இடங்கொடுத்துள்ளது என்றார்.

பிரிவினை வேண்டுமா என்பது இருதரப்பு மக்களும் ஒருவரோடு ஒருவர் பழகும் வித்திலேயே அமைந்துள்ளது என்று கூறி க்யூபெக் கனடாவிலிருந்து பிரிய முன்வரவில்லை ஸ்கொட்லாண்ட் பிரித்தானியாவில் இருந்து பிரிய முன்வரவில்லை என்று எடுத்துக் காட்டினேன். பழகும் விதத்தில்தான் இவை அமைந்துள்ளன என்றேன்.

எம்மை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் நாம் அடிபணிய வேண்டும் அல்லது போராட வேண்டும். எமது பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எமது மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவருக்கு கூறினேன்” என்றுள்ளார்.

0 Responses to சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள் சென்று சேர வேண்டும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.