Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால், அகதி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் டெய்ஜி டெல், யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார். இதன்போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசினார், இந்தச் சந்திப்பின் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களிடம் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “அகதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர், வருகை தந்தனர். தெல்லிப்பளை பிரதேசத்தில், அகதிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறான நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடர்பில் இதன்போது ஆராய்ந்தனர்.

இது தொடர்பில் என்னிடம் கேட்டபோது, யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் மக்களின் காணிகளில் இராணுவம் இருப்பதனால், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் வரக்கூடும். இராணுவ பிரசன்னத்தினாலும் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் அகதிகளாக உள்ள நிலை தொடர்கின்றது.

வடக்கு மாகாணத்தில் இராணுவம், மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினேன். மேலும், இந்தியாவில் இருந்தும் மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டு மக்கள் எமது நாட்டுக்கு திரும்பி வருவதை வரவேற்கின்றோம்.

ஆனால், அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவ்வாறு நாட்டுக்குத் திரும்பி வரும்போது, அவர்களின் காணிகள் வேற்று இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால், அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள்.

குடியமர்த்தியவர்களை வெளியேற்றாமல், அம்மக்களுக்கு மாற்றுக்காணி தருவதாக கூறிவருகின்றார்கள். இவை அனைத்தும், அவர்களுக்கு பல விதமான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றது எனத் தெரிவித்தேன்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவம் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதால் அகதி வாழ்க்கை தொடர்கிறது; ஐ.நா. பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.