Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்காலில் சிங்களத்தால் பலிகொள்ளப்பட்ட மக்களையும், மக்களுக்காகத் தமது உயிரையே வேலியாக்கிக் களமாடி வீழ்ந்த மாவீரர்களையும் நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதத்தை அனுட்டிக்குமாறு முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சிகளில் ஒருவரான தமிழ்வாணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

”அனைத்து உறவுகளுக்கும் என் அன்பு வணக்கம்,

இதுவரை நாங்கள் அனைவரும் மதம் சார்ந்த பல விரதங்களை கடைப்பிடித்திருக்கிறோம். ஆனால் மதம் தாண்டி இன ஒற்றுமையோடு ஒரு விரதத்தை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிட்டோம்.எங்களுக்காகவும், எங்களை சார்ந்தவர்களுக்காகவும் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் வரம் வேண்டி பல விரதங்கள் பிடிக்கிறோம். முதல் முறையாக எங்களுக்காக எல்லாவற்றையும் இழந்த எங்கள் புனிதர்களுக்காக ஒரு விரதத்தை நாம் பிடிக்கலாமே?

மே மாதம் யாராலும் மறக்க முடியாத ஒரு வாழ்நாள் ரணம் ஆகிவிட்டது.களமுனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவை மக்களுக்காகத் திருப்பி அனுப்பிவிட்டுப் பசியோடும் பகை விரட்ட போராடிய மாவீரர்களுக்காகவும், இறுதிவரை அவர்களுக்குப் பெரும் பலமாக நின்று உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்காகவும் இந்த மாதத்தில் 7 நாட்கள் ஒரு நேர உணவு மட்டும் உட்கொண்டு விரதம் இருப்போம்.

இந்த விரதம் எந்த வரத்தையும் வேண்டி மேற்கொள்வதல்ல. இதுவரை மண்ணுக்காக உயிர் நீத்த எங்கள் மாவீரர்களுக்கும், மக்களுக்குமான எம்மால் முடிந்த நன்றிக் கடன்.
2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிப் போரின் பொழுது பசியால் அழுத பல உறவுகளை நான் அறிவேன். எதிரியின் முகாமில் அடைபட்டு, உணவின்றி, தண்ணீரின்றிப் பல நாட்களை நான் கடந்து வந்துள்ளேன். அதனால் தான் இந்த விரதம்.எமது இறுதி மூச்சுள்ள வரை ஒவ்வொரு ஆண்டும் 2009ஆம் ஆண்டில் இதே மாதத்தில் நாம் அனுபவித்த வலிகளை மீண்டும், மீண்டும் நாம் அனுபவிக்க வேண்டும்: உணர வேண்டும் அப்பொழுது தான் இன்னமும் நாம் செய்து முடிக்காத எமக்கான கடமைகளைக் குற்ற உணர்ச்சியோடு எமது மனம் பார்க்கும்.

எதிரிகளும், துரோகிகளும் எங்களுக்கு இழைத்த அநீதியை நாங்கள் மட்டுமல்ல எங்கள் வரலாறும் மறக்கக்கூடாது. அடுத்த சந்ததியும் இந்த அவலத்தை நினைத்துகொண்டு போராட வேண்டும்.இந்த மாதம் விரதம் மேற்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல் முடிந்த வரை தாயகத்தில் வாழும் எங்கள் மக்களுக்கும் மேலதிக உதவிகளைச் செய்வோம்.இன்றைய நாளிலேயே (12.05.2009) எதிரியின் குண்டுத்தாக்குதலில் முள்ளிவாய்க்காலில் எமது மருத்துவமனை அழிக்கப்பட்டு அதிக அளவிலான எமது உறவுகள் துண்டு துண்டாகச் சிதறுண்டு பலியானார்கள். எனவே இன்று முதல் வரும் 18ஆம் நாள் வரை இந்த விரதத்தை அனுட்டிப்போம்.

தமிழ்வாணி.

0 Responses to தமிழின அழிப்பு நினைவு வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் விரதம் அனுட்டிப்போம் - தமிழ்வாணி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...