Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள அமெரிக்கக் காங்கிரஸ் சபை உறுப்பினரான பில் ஜோன்சனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, அமெரிக்கப் பிரதிநிதியிடம் முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்கப் பிரதிநிதி என்னுடைய அரசியல் ரீதியான பயணம் எப்படி இருக்கின்றது என கேள்வி எழுப்பியிருந்தார். 2015 ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாம் எதிர்பார்த்தமைக்கு மாறாக, இன்னும் இரண்டு வருடம் தாமதமாக இருப்பதனால், மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களில் எமது மக்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். துணிவான சில நடவடிக்கைகளை எடுக்காமையினால், அரசியல் காரணங்களுக்காக நாம் எடுக்க வேண்டிய எமது நடவடிக்கைகளையும் முக்கியமான செயற்பாடுகளையும் எடுக்காமல் இருப்பது, மக்களிடையே ஒரு விதமான விசன நிலையை ஏற்படுத்தும்.

இதுவரையில் மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்காமை, மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, காணாமல் போனோர் பிரச்சினைகள், மக்களின் காணிகளை இராணுவத்தினர் வைத்திருப்பது போன்ற பல விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.

நடைபெற்று முடிந்த ஜெனீவா கூட்டத்தின் போது, மேலும் 2 வருட காலம், இலங்கைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் இணைந்து, தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளனர். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

என்ன விடயங்கள் நடைபெறுகின்றன, எப்போது நடைபெறுகின்றது, என்ன விடயங்கள் நடைபெறவில்லை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவேற்ற முடியுமா, 2 வருட காலத்தில் கூட எடுத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என, இப்போதே கேட்க வேண்டும்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை, எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு அமெரிக்காவின் ஒத்தாசை அவசியமென்பதனையும் வலியுறுத்தினேன்”என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.