Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பிரிவினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. நிறைவேறாத வாக்குறுதிகளையும், நடக்க முடியாத பொய் நம்பிக்கைகளையும் கூறி தமிழ்மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக மக்கள் விழித்தெழுவார்கள் என்று நாம் நீண்ட காலமாகவே கூறி வந்திருக்கின்றோம். அது நடந்திருக்கின்றது.

புதிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றும், தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருவோம் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருவோம் என்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தருவோம் என்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை மறந்தவர்களாக பதவிச் சுகபோகங்களுக்குள் மயங்கிக் கிடக்கின்றார்கள்.

மக்களின் தேவைகளைப் புறக்கணித்தும், போராட்டங்களை பொருட்படுத்தாமலும் வெறுமனே தமிழ்த் தேசியத்தை மட்டும் பேசிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை தமிழ்த் தலைமைகள் தாமே என்போருக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.

கொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் தமது குடும்பம் மற்றும் உறவுகளுடன் பாதுகாப்பாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள், அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் பாராளுமன்றப் பதவிகளுக்குள் பாதுகாப்புத் தேடியவர்கள்,

இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என்று எமது மக்கள் தமிழ்த் தலைவர்கள் என்போருக்கு நேரடியாகவே கூறியிருக்கின்றார்கள்.

உறவுகளை இழந்தும், உடல் அங்கங்களை இழந்தும் வெயிலிலும், மழையிலும் கண்ணீர் வடித்தபடி மக்கள் நிற்கையில், தேர்தலுக்குப் பின்னர் அரசுடன் இணக்க அரசியல் நடத்தி பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களை எட்டியும் பார்க்காதவர்கள்.

எமது மக்கள், துயரங்கள் சுமந்து வாழும் தெருக்களில் பாதம் பதித்து நடக்காதவர்கள் இன்று தாமே அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் குடைபிடிக்க அங்கே கூடியிருந்து தமக்கிடையேயான அரசியல் முரண்பாடுகளை மறந்து தாம் ஒன்று கூடிவிட்டதாக கூறியதை மக்கள் கடுந்தொனியில் விமர்சித்திருக்கின்றார்கள்.

மறைந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றி நினைவு கூறியதாகக் கூறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், போரின் வடுக்களைச் சுமந்து இன்னும் அந்த மண்ணில் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதே முள்ளிவாய்க்காலில் கூடிய மக்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் ஆசியைப்பெற்ற எதிர்க்கட்சியாகவும், மாகாணங்களில் ஆட்சியாளர்களாகவும் பதவிகளில் அலங்கரிப்பவர்கள், வரிச்சலுகை சொகுசு வாகனங்களில் அதிகாரத் தோரணையோடு ஊர் சுற்றுகின்றவர்கள், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும், அழிக்கப்பட்ட எமது பூர்வீக மண்ணுக்கு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று எமது மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், தெளிவும் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com