Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கழகச் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் : 1

தமிழ்நாடு, தமிழ், தமிழர் நலன் என மொழி - இனப் பெருமை காக்கும் திராவிடப்
பேரியக்கத்தின் சிறப்பு மிகுந்த வரலாற்றில் ஒவ்வொரு நாளுமே முத்தான
சாதனைகளை நடத்துக் கொண்டிருக்கிறது. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின்
இலட்சியம் மிகுந்த பயணத்தின் 75 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக உழைத்து -
இன்றைக்கும் நம்மையெல்லாம் ஜனநாயக ரீதியில் வழிநடத்துகிற ஆற்றலும்
ஆளுமையும் மிக்க தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் அடியெடுத்து
வைத்த 60ஆம் ஆண்டு நிறைவு பெறுகிற தமிழகம் மட்டும் அல்ல - இந்தியாவே
போற்றும் மிக உன்னதமான தருணம்.

சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 ஆவது முறையாக போட்டியிட்டு வெற்றியை
மட்டுமே சுவைத்த உன்னத தலைவர். பேரறிஞர் அண்ணாவின் இயக்கமும்,அவர்
கண்டெடுத்த உதயசூரியன் சின்னமும் மாநிலக் கட்சிகள் வரலாற்றில் மட்டுமல்ல-
இன்றைக்கு தேசிய கட்சிகளின் வரலாற்றையும் விஞ்சி விடும் அளவிற்கு சாதனை
மலர்களால் பூத்துக் குலுங்குகிறது என்றால் தலைவர் கலைஞர் அவர்களின்
சீர்மிகு பணியே காரணம். இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சிக்கும்
கிடைத்திடாத மாணிக்க மகுடமாக தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக்
கழகத்திற்கும், இந்த திராவிட பேரியக்கத்திற்கும் திகழ்கிறார்.

1957ஆம் ஆண்டு தி.மு.கழகம் முதன்முதலாக சந்தித்த பொதுத்தேர்தலில்
குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள்
2016-ல் தான் பிறந்து தவழ்ந்த திருவாரூர் மண்ணில் நின்று வெற்றி
பெற்றார். 1957 ஏப்ரல் 1ஆம் நாள் சட்டமன்றத்திற்குள் பேரறிஞர் அண்ணா
தலைமையில் நுழைந்து இன்றைக்கு வைரவிழா காணும் தலைவர் கலைஞர் அவர்கள்
தலைமையில் இது நாள் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக் கொடியை
உயர உயரப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்தக் கூட்டம்
பெருமையுடன் பதிவு செய்கிறது.

முதன்முதலில் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியைச் சேர்ந்த நங்கவரம்
உழவர்களின் உரிமைப்போராட்டத்தில் அவர்களுடன் நேரடியாகக் களத்தில்
பங்கேற்றதுடன், அந்த விவசாயிகள் பிரச்சனையை “கையேர் வாரம், மாட்டேர்
வாரம்” என்று தன் கன்னிப் பேச்சாக சட்ட மன்றத்தில் தனது உரைக்
காவியத்தைத் தொடங்கியவர். எதிர்க்கட்சி வரிசையிலும் ஆளுங்கட்சி
வரிசையிலும் கம்பீரமாக வீற்றிருந்து கழகப் பணி மட்டுமல்ல - தமிழக மக்கள்
பணியையயும் ஆற்றியவர். ஆளுங்கட்சியாக இருந்தால் மக்கள் கோரிக்கை வைக்கும்
முன்பே நிறைவேற்றி வைக்கும் மனமும், எதிர்கட்சியாக இருந்தால் மக்களின்
கோரிக்கைகளை வலுவாக சட்டமன்றத்தில் எடுத்து வைக்கும் பாங்கும் தலைவர்
கலைஞர் அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அந்த திறமையில் தலைவர் கலைஞர்
அவர்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள்தான் நிகர் என்றால் மிகையாகாது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை -
போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள்
இருந்தபோதுதான்,இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் பேருந்துகள்
நாட்டுடைமையாக்கப்பட்டு,பொதுவுடைமைச் சித்தாந்தம் பூக்கத் தொடங்கியது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் அவரது தோளில்
சுமத்தப்பட்ட நிலையில் குடிசைமாற்று வாரியம்,பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை, கை ரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளித் திட்டம், தொழுநோய் மறுவாழ்வு
இல்லம் எனப் பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியதை தமிழகம் என்றும்
நினைவில் கொண்டிருக்கும்.

பெண்களுக்கான சம சொத்துரிமை, பொருளாதார உரிமை, நிர்வாக உரிமை, அரசியல்
உரிமை அனைத்தையும் வழங்கி தாய்குலத்தின் தன்னிகரில்லாத் தலைவராக
திகழ்ந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். சமூக நல்லிணக்கத்திற்கு தந்தை
பெரியார் பெயரில் சமத்துவபுரம், தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில்
இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான
சட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவீத ஒதுக்கீடு,
சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு
உள்ஒதுக்கீடு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதல் தலைமுறை
பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத் தொழிற்கல்வி, கட்டாயத் தமிழ்க் கல்வி,
நுழைவுத்தேர்வு ரத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை,
திருநங்கைகளுக்குத் தனி வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்,
விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி, அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு
வாரியங்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டும்
திட்டங்களைச் செயல்படுத்தி “மக்களின் நண்பனாக” திகழ்ந்தவர் தலைவர்
கலைஞர்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சிப்காட் தொழில் வளாகங்கள்,டைடல் பார்க்,
புதிய புதிய தொழிற்சாலைகள், போர்டு, ஹூண்டாய் போன்ற மோட்டார்
தொழிற்சாலைகள், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டங்கள், மெட்ரோ ரயில்
திட்டம் போன்ற பல முக்கிய தொலை நோக்குத் திட்டங்களை வடிவமைத்து
நிறைவேற்றி “உட்கட்டமைப்பு உருவாக்கத்தின்” சிற்பியாக தலைவர் கலைஞர்
அவர்கள் செயல்பட்டதை தமிழக மக்களின் மனதில் பசுமையான நினைவுகளாக
என்றைக்கும் குடி கொண்டிருக்கும்.

அனல் பறக்கும் வாதங்களை அழகுற, அடுக்கு மொழியில், அரசியல் நாகரிகத்துடன்
சட்டமன்றத்தில் எடுத்து வைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற
செயல்பாடு ஆராய்ச்சி மாணவர்களுக்கு என்றைக்கும் அற்புதமான கையேடாகக்
திகழும் என்பதில் சந்தேகமில்லை. இயக்கத்தின்மீது சுமத்தப்படும்
அவதூறுகளுக்கு ஆணித்தரமாக பதில் அளித்திருக்கிறார். அவர்மீது கோபத்துடன்
வீசப்பட்ட கணைகளை “பூச்செண்டு” போன்று மென்மையுடன் பெற்றுக்
கொண்டு,நெற்றியடிப் பதில்களை நகைச்சுவையுடன் தந்திருப்பதை சட்டமன்ற
விவாதங்களை பார்த்தவர்கள், படித்தவர்கள் நன்கு உணருவார்கள்.

சட்டப் பேரவையில் அவருடைய உரைகளில் தென்றல் தவழ்ந்திருக்கிறது; சூறாவளி
வீசியிருக்கிறது. சட்டப்பேரவையில் மட்டுமின்றி, சட்ட மேலவையிலும்
உறுப்பினராக இருந்த சிறப்பு தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. எந்த
அவையில் இருந்தாலும் அவருடைய சட்டமன்றப் பணிகள் மக்கள் நலன்
சார்ந்தும்,ஜனநாயகத்தின் மாண்புகளை மதித்துப் போற்றிடும் வகையிலும்
இருக்கும். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது எதிர்க்கட்சிகள் எவ்வளவோ அமளி
துமளிகளை உண்டாக்கிய போதும், அவையின் கண்ணியத்தைக் காப்பதற்காக பேரவைத்
தலைவர் நடவடிக்கைகளை எடுத்த போதும்,அவற்றையெல்லாம் கடந்து,
எதிர்க்கட்சியினர் இல்லாமல் அவை நடைபெறக்கூடாது என்ற அசைக்க முடியாத
எண்ணத்தோடு அவர்களையும் பங்கேற்க வழி அமைத்துக் கொடுத்து “ஜனநாயக
தீபத்தை” தன் கையில் எப்போதும் ஏந்திப் பிடித்துக் கொண்டிருக்கும்
ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் என்பதற்குச் சட்டமன்ற ஏடுகளே இன்றைக்கும்
சான்றுகளாக பேரவை நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

60 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும் ஜனநாயகப்
பண்பும் வியப்பளிக்கும் விவேகமும் பேரவை உறுப்பினர்களுக்கு இன்றைக்கும்
வழிகாட்டும் நெறிமுறைகள். மத்திய- மாநில உறவுகள் குறித்து நீதியரசர்
பி.வி.ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தது, மாநில சுயாட்சி குறித்து
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட்
15அன்று ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை
பெற்றுத் தந்த சுயமரியாதைப் போராளியாக விளங்கியவர் தலைவர் கலைஞர்
அவர்கள். தொழிலாளர் தினமான மே தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை
தமிழகத்தில் அளித்ததுடன், இந்தியப் பிரதமராக சமூகநீதிக் காவலர்
வி.பி.சிங் அவர்கள் இருந்தபோது, அவரிடம் வலியுறுத்தி இந்திய அளவிலும் மே
தினத்துக்கு விடுமுறை கிடைக்கச்செய்து,தொழிலாளர்களின் உரிமை காத்த
தூயவர்! அதுபோலவே, மண்டல் குழுவின் பரிந்துரைகளை ஏற்கச் செய்து, மத்திய
அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற்று மத்திய அரசு
நிர்வாகத்தில் பங்கெடுப்பதற்கு வழி வகை செய்து “சமூக நீதி காத்த தலைவராக”
விளங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

காவிரி நடுவர் மன்றம்,இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பு, தமிழுக்கு
செம்மொழித் தகுதி, சேலம் இரும்பாலை, சேது சமுத்திரத் திட்டம்,
தூத்துக்குடியில் ஆழ்கடல் துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்
என்று வேளாண் ஆதாரங்களையும், பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு
ஆதாரங்களையும் உருவாக்க பாடுபட்ட தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய இளைஞர்
சமுதாயத்திற்கு அன்றே நம்பிக்கை நாயகனாக திகழ்ந்தவர் என்றால் சாலப்
பொருத்தமாகவே இருக்கும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136
அடியிலிருந்து

142 அடியாக உயர்த்துவதற்கு வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டவர் தலைவர்
கலைஞர். இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு
செய்ததில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பும் அகில
இந்திய அளவில் தென்னிந்தியாவின் மூத்த தலைவராக அவருக்கு உள்ள
மரியாதையும் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருப்பவை.

புகழ்பெற்ற தமிழக சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள்
என்றென்றும் வைரம்போல மிளிரும் -ஒளிரும்! நமக்கு மட்டுமல்ல உலகத்
தமிழர்கள் அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ள முத்தமிழறிஞர்
தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வைர விழாவும், 94 வது பிறந்த நாளும்
நடைபெறும் இந்த நேரத்தில் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக அதிக
சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட எதிர்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம்
வீற்றிருக்கிறது என்பதை தலைவர் கலைஞர் அவர்கள் இந்த கழகத்திற்கு சேர்த்த
பெருமை என்றே இக்கூட்டம் கருதுகிறது. ஜனநாயக பூர்வமான சட்டமன்ற
விவாதங்களுக்கும், மக்களுக்கான தன்னலமற்ற சேவைக்கும், அரசியல் வாழ்வில்
தூய்மைக்கும், அரசியல் நாகரீகத்திற்கும், ஆக்கபூர்வமான
செயல்பாடுகளுக்கும், “உடன்பிறப்பு” என்ற ஒற்றை வார்த்தையில் எங்களை
கட்டிப்போட்டு, இன்றைக்கு எங்களுக்கு எல்லாம் கலங்கரை விளக்கமாகத்
திகழும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக்
கூட்டம் பாசமிகு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வணக்கத்தோடு
தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 2

பதினைந்தாவது தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடரை கடந்த
11.5.2017 அன்று அதிமுக அரசு இறுதி செய்து (ஞசடிசடிபரந) வைத்துள்ளது.
சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை சீர்குலைத்து, மக்களின் வாழ்வாதாரப்
பிரச்சினைகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடமளிக்கக் கூடாது
என்ற உள்நோக்கத்துடன் அதிமுக அரசு செயல்படுவதாக அமைந்திருக்கிறது. தமிழக
சட்டப் பேரவை விதிகளுக்கும்,அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவுகளுக்கும்,
அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கும் விரோதமாக சட்டமன்றக் கூட்டத்தொடர்
இறுதி செய்யப்பட்டுள்ளதை மன்னிக்க முடியாத ஜனநாயக படுகொலையாக திராவிட
முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

2017-2018 ஆம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் கடந்த 16-03-2017 அன்று
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான பொது விவாதம்
24-03-2017 அன்று நிறைவடைந்தது. சட்டப்பேரவை விதி183(1)-ன் படி, பொது
விவாதம் மற்றும் மானியங்கள் மீதான வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும்
உள்ளடக்கியதுதான் வரவுசெலவுத்திட்டம். அதனால்தான் வரவு செலவு திட்ட பொது
விவாதம் முடிவுற்ற பிறகு பேரவை விதி 185(3)-ன் கீழ் துறை சார்ந்த
மானியங்கள் மீதான வாக்கெடுப்பு அவையில் நடைபெற வேண்டும் என்று
தெளிவுபடுத்துகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு
அரசியல் சட்டப் பிரிவு 204 -ன் படி நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு தாக்கல்
செய்யப்பட்டு, திட்டங்களுக்கும், செலவினங்களுக்கும் தேவையான நிதியை
பயன்படுத்த தமிழக அரசுக்கு சட்டப்பேரவை அனுமதியளிக்கிறது.

ஆனால் இந்த நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. ஆர்.கே நகர் இடைத்
தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட சட்டப்பேரவையை கூட்டவில்லை.
திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான
தளபதி அவர்கள் 19.4.2017 அன்று பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து
“சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தும்,
மாண்புமிகு முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்தும் சட்டப்பேரவை மீண்டும்
கூடவில்லை. வரவு செலவு திட்டத்தின் மீதான பொது விவாதத்தை முடித்து,
சட்டப்பேரவை விதிகளின் படி 30 நாட்களுக்கு நடைபெற வேண்டிய “மானியக்
கோரிக்கைகள் மீதான விவாதத்தை” அனுமதிக்காமலேயே வரவு செலவு திட்டம்
அந்தரத்தில் நிற்கும் சூழலில் சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர்
திடீரென்று இறுதி செய்யப்பட்டுள்ளது மக்களாட்சி தத்துவத்தின் உன்னத
நோக்கத்தை குழி தோண்டிப் புதைப்பதாக இருக்கிறது. சட்டமன்ற
மரபுகளையும்,சட்டமன்ற விதிகளையும், அரசியல் சட்ட பிரிவுகளையும் மீறி
நடந்து கொள்ளும் ஒரு முதலமைச்சரும், அதற்கு துணை போகும் பேரவைத் தலைவரும்
புகழ் பெற்ற சட்டமன்றத்தை தவறான முன்னுதாரணங்களை உருவாக்கும் மன்றமாக
மாற்றி வருவதற்கு இந்தக் கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சட்டமன்ற கூட்டத்தை கூட்டினால் வைரவிழா காணும் தலைவர் கலைஞர் அவர்களின்
அருமை பெருமைகளை அவையில் பதிவு செய்து விடக்கூடாது என்ற நய வஞ்சகத்துடன்
சட்டப்பேரவை கூட்டத்தை அதிமுக அரசு இறுதி செய்து வைத்திருக்கிறது. துறை
சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறவில்லையென்றால்
நிதி நிர்வாகம் மேலும் மோசமடையும் என்று நன்கு தெரிந்த மாண்புமிகு தமிழக
பொறுப்பு ஆளுநர் அவர்களும் இதை தட்டிக் கேட்காமல் அதிமுக அரசின்
பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது அவருக்குள்ள கடமைகளையும்
அதிகாரங்களையும் மாநில நலனுக்காக செயல்படுத்தும் அணுகுமுறையாகத்
தெரியவில்லை என்று இந்த கூட்டம் வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

தமிழக நலன்கள் பற்றியோ,வறட்சியின் கொடுமை, விவசாயிகள் தற்கொலை,
தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள
லட்சக்கணக்கான மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
உள்ளிட்ட எந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து முடிவு
எடுக்க சட்டப்பேரவையைக் கூட்டாமல் அதிமுக அரசு அலட்சிய மனப்பான்மையுடன்
நடந்து கொள்வது மக்களாட்சி தத்துவத்தை அராஜகமாக மீறும் செயல் என்று இந்த
கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் காலத்தில்
மக்களாட்சி முறையின் மாண்பையும் மதிப்பையும் போற்றிப் பாதுகாக்கும்
மாபெரும் மன்றமாக திகழ்ந்த தமிழக சட்டப் பேரவை இன்றைக்கு அதிமுக
ஆட்சியின் அத்துமீறிய தலையீடுகளால் தன் பெருமையையும், புகழையும் இழந்து
நிற்கும் பரிதாப நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி
நிர்வாகத்தை கண்காணிக்கும் அரசியல் சட்டப் பொறுப்புள்ள சட்டப் பேரவையைக்
கூட்டாமல் திடீரென்று இரண்டாவது கூட்டத் தொடரை இறுதி செய்து
வைத்திருப்பதற்கு இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனது கடும்
கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகம் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும்,
பேரவை விதிகளின்படி வரவு செலவு திட்ட நடைமுறைகள் முழுமை பெறவும், நிதி
அதிகாரம் படைத்த சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசு நிதியை
செலவிடுவதை தவிர்க்கவும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட
வேண்டும் என்று இந்தக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர், பேரவைத் தலைவர்,
தமிழக பொறுப்பு ஆளுநர் ஆகியோரை வலியுறுத்துகிறது.

0 Responses to சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Post a Comment

Followers