Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று ஜூன் 21ம் திகதி சர்வதேச யோகா தினமாகும். இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா சபையிடம் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ம் திகதியை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய கடந்த வருடத்திலிருந்து இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரபஞ்ச மொழியாக யோகா உருவெடுத்து விட்டது எனவும், பல்வேறு மதத்தவர்களும், கலாச்சார வேறுபாடுகள் உடையவர்களும் யோகாவை ஒரு பொதுமொழியாக, பொதுப் பயிற்சியாக பின்பற்றத் தொடங்கிவிட்டனர் எனவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடந்த 2013ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மில்லியன் மக்கள், யோகா பயிற்சிகளை தமது நாளாந்த நடவடிக்கையாக மேற்கொள்கின்றனர்.  யோகாவின் தாயகமான இந்தியாவை விட அமெரிக்காவில், 9.5 % வீத இளைஞர்களும், 3.1% சிறார்களும் யோகாவை பயிற்சியை அதிகமாக பின்பற்றுகின்றனர். இந்தியாவின் பாரம்பரிய தியான பயிற்சி முறையான யோகாவின் பிரணாயம் மற்றும் ஆசனப் பயிற்சிகள்  உடல் நலத்திற்கு பெரிதும் உதவுபவன. இந்தியாவில் இன்றளவும் மாரடைப்பு நோய், நான்கில் இரு இந்தியரின் இறப்புக்கு காரணமாகிறது.

கடந்த பத்து வருடங்களில் இந்நோயினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 17% வீதமாக அதிகரித்துள்ளது. மன அழுத்தம், சர்க்கரை நோய், டிஸ்லிபிடெமியா, உடல் பருமண், உடல் பயிற்சியின்மை, புகையிலை பாவணை என்பன இந்நோய்க்கு காரணமாகின்றன.  யோகாவை தினந்தோறும் 30 நிமிடங்கள் பின்பற்றுபவர்களுக்கு மன அழுத்தமும், இரத்த அழுத்தமும் இரு மாதங்களுக்குள் 12/13% வீதமாக குறைவடைந்து விடுவதாக சுகாதார ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

யோகாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய இந்தியாவின் ஐந்து பிரபலமான யோகா மேதைகளை பற்றி yourstory.com தளத்தில் பார்க்க கிடைத்தது. அவர்களுக்கான நன்றியுடன் இங்கு மீள்பதிவிடுகிறோம்.

1. திருமலை கிருஷ்ணமாச்சார்யா

1888 முதல் 1989 காலங்களில் வாழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யாவின் யோகா முறையில் இல்லாத ஆசனங்களே இல்லை எனலாம். இந்திய எல்லைக்குள் பிரபலமாக இருந்த இவரின் பாரம்பரிய யோகா முறை உலக அளவில் பரவியது. இன்று பின்பற்றப்படும் வெவ்வேறு முறை யோகா வகைகளிலும் இவரின் அடித்தளம் இருக்கும். யோகா உலகம் இவர் எனில் இல்லை என்றே சொல்லலாம்.

2. சுவாமி சிவானந்தா

1887-1963 காலத்தில் வாழ்ந்த இவர், 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய யோகா குரு என்று அழைக்கப்படுகிறார். சிவனாந்தா யோகா வேந்தாந்தா மையம் அமைவதற்கான முக்கிய ஊக்கமும் காரணமும் இவரே. அன்பு, உதவி, தியானம், பரிசுத்தம், உணர்ந்திடு,சேவை ஆகிய ஆறு முக்கிய குறிக்கோள்களோடு இவரது யோகா முறை இருந்தது. யோகா மேதை கிருஷ்ணமாச்சார்யாவை போலவே இவரும் ரிஷிகேஷை தாண்டி இந்தியாவை விட்டு வெளியே சென்றதில்லை. பல புத்தங்களை தன் கைகளாலேயே எழுதியுள்ள இவரின் படைப்புகள் உலகப்புகழ் வாய்ந்தவை ஆனது.

3. பிகேஎஸ் ஐயங்கார்

பெல்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்தரராஜ ஐயங்கார், 1918 முதல் 2014 வரை வாழ்ந்தார். உலகின் பிரபலமான யோகா குருவாக அறியப்பட்ட இவர், ஐயங்கார் யோகா பாணியின் நிறுவனர். யோக சூத்ரங்களின் உண்மையான அர்த்தங்களை கண்டறிந்து, அதை உலகம் அறியச் செய்து, பலரையும் அதில் பயிற்சி மேற்கொள்ள வைத்தவர். வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவை மாற்றிய பெருமை இவரையே சாரும். மரக்கட்டைகள், கயிறு, பெல்ட் என்று பலவித உபகரணங்களை பயன்படுத்தி உடலுக்கு யோகாவின் சிறப்பை ஆசனாக்கள் மூலம் அளித்தவர். ஒவ்வொரு யோகா அசைவுகளையும் கச்சிதமாக செய்து காட்டுவதில் வல்லவர்.

4. கே.பட்டாபி ஜோய்ஸ்

1915-2009 காலத்தில் வாழ்ந்த மற்றொரு பிரபல யோகா மாஸ்டர் இவர். அஷ்டாங்க யோகா பாரம்பரியத்தை வழிநடத்தி சென்றவர். தன் வாழ்நாள் முழுதும் யோகாவிற்காக அற்பணித்து, பல மாணவர்களை உருவாக்கியவர். கிருஷ்ணமாச்சார்யாவிடம் இருந்து கற்ற யோகாவை நல்ல முறையில் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றவர். 1948-ல் அஷ்டாங்க யோகா ஆராய்ச்சி மையத்தை நிறுவினார் பட்டாபி ஜோய்ஸ். இது மைசூரில் உள்ளது.

5. மஹரிஷி மஹேஷ் யோகி

1918 முதல் 2008 வரை வாழ்ந்த மஹேஷ் யோகி, சிரித்துக் கொண்டே இருப்பார். உலக புகழ் பாடகர்கள் பீட்டில்ஸ், தி பீச் பாய்ஸ் மற்றும் பல பிரபலங்களின் யோகா குருவாக இருந்துள்ளார். இவர் ‘தியானம்’ அதுவும் குறிப்பிட்ட ஒருவகை மெளன தியானம் செய்வதில் வல்லவர். மெளனமாக மந்திரத்தை மனதில் சொல்லிக்கொண்டு செய்யும் இவ்வகை தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் பல வந்துள்ளது. 1965 தொடங்கிய இந்த முறை, பல பள்ளிகள், பல்கலைகழகங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்க மாநகராட்சிகள், ஐரோப்பா, இந்தியா என்று பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.

0 Responses to இன்று ஜூன் 21 : சர்வதேச யோகா தினம் : இந்தியாவும், உலகும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com