Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி அங்கு குறைந்த பட்சம் 77 பொது மக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் இதில் பலர் நிலத்தில்  புதையுண்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக தென்கிழக்கு பங்களாதேஷில் தான் பொது மக்கள் உறக்கத்தில் இருந்த போது பல வீடுகள் மண்சரிவால் அடித்துச் செல்லப் பட்டு பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தான் இப்பகுதியைத் தாக்கி இருந்த சைக்கிளோன் புயலுக்கு ஆயிரக் கணக்கான றோஹிங்கியா அகதிகளின் பாசறைகள் துவம்சம் செய்யப் பட்டிருந்தன. இந்நிலையில் மண்சரிவு கடுமையாகத் தாக்கியுள்ள சிட்டாகொங் மலைப் பகுதிகளில் உயிரிழப்பு இன்னமும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அப்பகுதியில் தொலைபேசி உட்பட தகவல் தொடர்பும் மின்சாரமும் துண்டிக்கப் பட்டுள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் முழு மூச்சாகத் தொடருகின்றன. இந்திய எல்லைக்கு அருகே றங்கமட்டி என்ற மாவட்டத்தில் உள்ள மலைப் பாங்கான கிராமப் பகுதிகளில் வறிய பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 48 பேர் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிய வருகின்றது. மியான்மார் இனவழிப்பில் இருந்து தப்ப அங்கிருந்து வெளியேறிய சுமார் 300 000  றோஹிங்கியா பழங்குடி முஸ்லிம்கள் தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலைநகர் டாக்கா உட்பட துறைமுக நகரான சிட்டாகொங் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 222  மில்லிமீட்டர் அளவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள மக்கள் இன்னமும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதேவேளை துருக்கியில் அமைந்துள்ள கிரீக் தீவுகளில் திங்கட்கிழமை நள்ளிரவு 6.3 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானதாகவும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஜியன் கடலில் இருந்து சுமார் 11 Km தூரத்தில் 10 Km ஆழத்தில் மையம் கொண்டு தாக்கிய இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் மற்றும் தேவாலயங்கள் கடைத் தொகுதிகள் என்பன சேதம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட  பகுதிகளில் இராணுவத்தினர் மும்முரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Responses to பங்களாதேஷில் கனமழை நிலச்சரிவுக்கு 77 பேர் பலி! : துருக்கி நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...