Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள மாட்டு இறைச்சி தடைச் சட்டத்தினை நீக்காவிட்டால் தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நலன் காக்கவும், உணவு உரிமையை பாதுகாக்கவும், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், மாட்டு இறைச்சி தடைச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் சென்னையில் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் பேசியுள்ளதாவது, “மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளதை கண்டித்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த காரணத்தால் நாடு முழுவதும் மாட்டு சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இப்போது மத்திய அரசு கொடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த ஆட்சியில் சாதனை என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்லும் நிலையில் எதுவும் இல்லை. சாதனைக்கு பதில் நாம் வேதனையைத்தான் அதிகம் சந்தித்து உள்ளோம். ஊழலை ஒழிக்க லோக்பால் கொண்டு வருவோம், வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார்.

இதுவரை ரூ.15 ஆவது ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போட்டாரா? என்றால் இல்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவோம் என்று கூறினார். ஆனால் அதனை செய்துகொடுக்கவில்லை. இப்போது மாட்டு இறைச்சிக்கு தடை போட்டு இருக்கிறார். நாம் உண்ணும் உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். மோடி எதை விரும்புகிறாரோ அதையே நாமும் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், அரசியல் சட்டம் நமக்கு வழங்கிய தனி உரிமை மறுக்கப்படுவதாகத்தான் கருத முடிகிறது.” என்றுள்ளார்.

0 Responses to மாட்டு இறைச்சி தடைச் சட்டத்தை நீக்காவிட்டால் ‘மெரினா புரட்சி’ வெடிக்கும்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...