Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் பெயரில் கத்தார் நாட்டுடனான இராஜங்க தூதரக உறவைத் தாம் துண்டித்திருப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும் யேமெனில் நடந்து வரும் போரில் இருந்தும் கத்தார் படைகள் விடுவிக்கப் படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இந்த அனைத்து நாடுகளும் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் போக்குவரத்தையும் துண்டிக்கப் போவதாக அறிவித்துள்ளதால் கத்தார் ஏர்வேஸ் போன்ற பிரபல விமான சேவை நிறுவனங்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை செவ்வாய்க்கிழமை முதற்கொண்டு அபுதாபி அரசு தனது கத்தாருக்கான எடிஹாட் விமான சேவையைத் துண்டிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது அபுதாபியில் இருந்து கத்தார் தலைநகர் டோஹாவுக்குச் செல்லும் அனைத்து விமானப் பயணங்களும் நிறுத்தப் படவுள்ளன. இது உலகளாவிய டிரான்சிட் சேவைகளையும் கடுமையாகப் பாதிக்கவுள்ளது.

கத்தார் அரசு தீவிரவாத குழுக்களுக்கு தொடர்ச்சியாக நிதியுதவி அளித்து வருவதாகவும் பஹ்ரைனில் நாசவேலைகளை ஏற்படுத்த ஈரானியக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் பஹ்ரைன் அரசு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. தன் மீதான இந்த 4 முக்கிய இஸ்லாமிய சக்திகளும் விதித்துள்ள தூதரகத் தடை உத்தரவு மற்றும் போக்குவரத்துத் தடை குறித்து  கத்தார் அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் இவ்வாறு தடை விதித்துள்ள முக்கிய 3 வளைகுடா நாடுகள் தமது நாட்டில் இருந்து கத்தார் நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்கள் வெளியேறவென 2 வார காலக்கெடு விதித்துள்ளது.

இதேவேளை திங்கட்கிழமை வளைகுடா நாடுகளால் விதிக்கப் பட்ட இந்த அதிரடி தடை உத்தரவு கத்தாரின் பொருளாதாரத்தைப் பாதித்து பங்குச் சந்தைகளிலும் 7.5% வீதம் வீழ்ச்சி அடைந்து கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளிலேயே மிக அதிகளவு அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள கத்தார் நாடு 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை உதைப் பந்தாட்டப் போட்டிகளையும் கொண்டு நடத்தத் தெரிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு புறம் கத்தார் இயற்கை வாயுவான LNG இன் மிகப் பெரிய விற்பனையாளர் என்பதால் அதன் மீதான தடையின் பின் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது.

கத்தார் நாடு மீது வளைகுடா நாடுகள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கத்தாருடன் இராஜங்க தூதரக உறவு துண்டிப்பு : சவுதி, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அதிரடி அறிவுப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.