Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேர்ஸினால் ஐ.நாவின் இளைஞர்களுக்கான சிறப்புத் தூதுவராக இலங்கையின் ஜயத்மா விக்ரமனாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். தனது 21 வயது முதல், உலகளவில் இளைஞர்களுக்கான வினைத்திறன் மேம்பாட்டிற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன், சர்வதேச இளைஞர் திறன் தினத்தின் அறிவிப்புக்கும் அவர் முக்கிய பங்காற்றியிருந்ததாகவும், அதோடு «Hashtag Generation» எனும் பெயரில் இலங்கையில், இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கென ஒருமித்த இயக்கத்தை கட்டியெழுப்பியவர் எனவும் ஐ.நா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்ற பொதுச் செயலரின் செயலாளராகவும், சர்வதேச யூத் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பின் உறுப்பினராகவும், ஐ.நாவுக்கான அதிகாரபூர்வ இளைஞர் பிரதிநிதியாகவும், இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத்தின் செனெட்டராகவும் பணிபுரிந்தவர் ஜயத்மா விக்ரமனாயக்க.

கொழும்பு பல்கலைக் கழகத்தில் அபிவிருத்தி கல்வியிலும், விஞ்ஞானத்திலும் பட்டப்படிப்பு மேற்கொண்ட அவர் 1990ம் ஆண்டு பிறந்தவர். இதுவரை காலமாக ஜோர்தானின் அஹ்மட் அல்ஹெந்தாவி, ஐநாவின் இளைஞர்களுக்கான விசேட தூதுவர் கடமையில் இருந்தார்.

இதேவேளை ஐ.நா பொதுச்செயலாளரினால்,  ஜயத்மா விக்ரமாநயக்க இளைஞர்களுக்கான தூதுவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் சிவில் யுத்தத்தில் இலங்கை அரசினால் இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமைக் குற்றங்கள், போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை  தொடர்பில் ஐ.நாவின்  விசாரணைக்குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதில் அளிக்காது, அவற்றை இலங்கை அரசு முற்றாக மறுத்து வரும் நிலையிலும், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமையாளர் நவநீதம் பிள்ளை மற்றும் தற்போதைய  மனித உரிமையாளர் ஆகியோரின் இலங்கை அரசு மீதான கண்டணங்களுக்கும், விசாரணை கோரல்களுக்கும் எந்தவித பதிலும் அளிக்கப்படாத நிலையிலும், சர்வதேச ரீதியில் இளைஞர்களின் உரிமை தொடர்பில் குரல் கொடுக்க இலங்கை அரசில் கடமை புரிந்த, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

0 Responses to ஐ.நா இளைஞர்களுக்கான சிறப்புத் தூதுவராக இலங்கையின் ஜயத்மா விக்ரமநாயக்க நியமனம்!

Post a Comment

Followers