Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். ஆனால் போர்க் குற்றத்திற்காக விடுதலைப் புலிகள் விசாரிக்கப்படுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். அவர்கள் செய்கின்ற எந்தக் குற்றங்களுக்கும் வயது குறைந்த சிறார்களைப் போன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அவர்களில் அனேகர் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்கள், எதுவித பயிற்சியுமின்றி கட்டாயப்படுத்தி போர்க் களத்திற்கு அனுப்பப்பட்டவர்களுமாவர்.” என்று தமிழர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை பகுதி பகுதியாக இல்லாமல் எல்லோரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டியும், அதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே வீரசிங்கம் ஆனந்த சங்கரி மேற்கண்டவறு குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 07ஆம் திகதி உள்ளுர் ஊடகங்களில் நீங்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரையை படித்தவுடன் அதற்குப் பதில்தரவேண்டும் என்ற தூண்டுதலைக் கட்டுப்படுத்த முடியாமல் இதனை எழுதுகிறேன். உங்களின் உரையில் குறிப்பிட்ட பல விடயங்கள் ஜனநாயக கோட்பாடுகள் சம்பந்தமாக உள்ளதால், ஜனநாயகம் பற்றி பேசும் தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை.

புதிதாக உருவாகி வரும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பது ஒரு புது கலாச்சாரமாக உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தாராள மனப்பான்மை தன்வீட்டிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்பது நீங்கள் அறியாததல்ல. நீங்கள் திரும்பதிரும்ப ஒரே குற்றத்தை பல தடவைகள் செய்கின்றமையால் நீங்களும் தண்டிக்கப்பட வேண்டியவரே! உங்களுக்கு நினைவூட்டுவதற்காக அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

1.“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் அன்றேல் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும்” என தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களை வேண்டுகிறது என்ற தலைப்புடன் 11.01.2009 அன்று விடுத்த எனது அறிக்கையை படித்தது ஞாபகமில்லையா? நீங்கள் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்க எவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காது காப்பாற்றியிருக்கலாம்.

2.“எமது மக்களைக் காப்பாற்ற கடைசி சந்தரப்பம்” என்ற தலைப்பில் 16.03.2009 அன்று தம்பி பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் 87,000 குடும்பங்களைச் சேர்ந்த 330,000 மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாமென எழுதியிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து பதிலெதுவும் கிடைக்கவில்லை. அது ஓர் ஆயுதம் தாங்கிய இயக்கம் ஆகையாலும், அதன் உறுப்பினர்கள் பல்வேறு விதமாக இணைக்கப்பட்டமையாலும் அவர்கள் குறிப்பிட்ட சில நியதிகளுக்குட்பட்டு செயற்படுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நான் அவர்களை குறைகூறவில்லை. ஆனால் நீங்கள் ஒரு தடவை முயற்சித்துப் பார்த்திருக்கலாம்.

3.2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முன்னைய ஜனாதிபதியின் செயலாளர் அரசியற் கட்சித் தலைவர்களை நாட்டின் தற்போதைய நிலைபற்றி ஆராயவென 26ஆம் திகதி சந்திப்பு என அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் மிகப் பாரதூரமான விடயம் யாதெனில் யுத்தமும், தடுத்து வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கூட்டத்தை பகிஷ்கரித்தது. நீங்கள் அன்று சமூகம் கொடுத்திருந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு இந்த மக்களை அழைத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் வேண்டியிருக்கலாம். ஒருவிதமான பதவியுமில்லாமல் கூட்டணித் தலைவர் என்ற அந்தஸ்தை வைத்து இன்னும் வன்னியில் 85,000 மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதிகூற நான் அதனை மறுத்துரைத்து 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியதும் ஜனாதிபதி கோபமாக உரத்துப் பேச என்னுடைய நிலைப்பாடு சரியென வற்புறுத்திக் கூறினேன்.

4.ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. சிவசங்கர் மேனன் உங்களை உடனடியாக டெல்லி வருமாறு அழைத்தபோது வேறு 9 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் திரு. மாவை. சேனாதிராசா சந்தித்துப் பேசி யுத்த நிறுத்தம் செய்யாமல் இந்தியாவுக்குப் போக மாட்டோம் என தீர்மானித்து டெல்லிக்கும் தெரிவித்திருந்தனர். ஏப்ரல் 11இல் நான் எனது பத்திரிகை அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பை நிராகரிப்பது என எடுத்த தீர்வு முட்டாள் தனமானது மட்டுமல்ல. எமது தேவைக்கு மிகவும் முரண்பட்டதாகும் எனத் தலையங்கமிட்டு அனுப்பியிருந்தேன். நீங்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்றிருந்தால் அல்லது நீங்களேனும் சென்றிருந்தால் அடித்துக்கூறுவேன் இந்திய அரசாங்கம் எமது மக்களைக் காப்பாற்ற ஒரு உறுதியான நடவடிக்கையை எடுத்திருக்கும். இப்படிச் செய்துவிட்டு இப்போது நீங்கள் யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்?

5.மே 2ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளுடன் “உடனடியாக அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அது ஒரு பெரும் அனர்த்தத்தில் முடியும் என குறிப்பிட்டிருந்தேன். மேலும் அந்தக் கடிதத்தில் “அரசுக்கு ஏற்புடையதான ஒரு சர்வதேச அமைப்பை தெரிவுசெய்து வன்னிக்கு அனுப்பி விடுதலைப் புலிகளுடன் ஆலோசித்து இந்த மக்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஏதுவாக ஆயுதங்களைக் கையளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கும்படி வேண்டியதுடன் அதற்கு 2 வார அவகாசமும் கொடுக்கலாம் என வேண்டியிருந்தேன். ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கூட்டத்திற்குப் போவதற்கு உங்களுக்கு என்ன தடை இருந்தது? கலந்து கொண்டிருந்தால் சில நிபந்தனைகளுக்கு அமைய அவர்களுக்கு வசதி செய்யும்படி வற்புறுத்தியிருக்கலாம்.

6.நாடு ஒரு பெரிய அனர்த்தத்தை எதிர்நோக்கி இருப்பது தெரிந்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் பிரித்தானிய பாராளுமன்ற குழு வருகைதந்தபோது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் சில அனர்த்தங்கள் ஏற்படலாம் ஆகையால் அதை தடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தீர்கள்! இதன் அர்த்தம் யாதெனில் நீங்களும் உங்கள் குழுவினரும் இந்தியத் தேர்தல் முடிந்ததும் ஒரு பாரிய அனர்த்தம் நடைபெறும் என அறிந்து வைத்திருந்தீர்கள்! உங்கள் குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை வெளிநாட்டில் சுற்றுலாவுக்கு அனுப்பிவிட்டு இப்படியான ஒரு உரையை ஆற்றுவதற்கு வெட்கம் இல்லையா? நான் தற்போது உங்களைக் கேட்க விரும்புவது யாதெனில் உங்கள் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா?

யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் யுத்த குற்றத்திற்காக விடுதலைப் புலிகள் விசாரிக்கப்படுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். அவர்கள் செய்கின்ற எந்தக் குற்றங்களுக்கும் வயது குறைந்த சிறார்களைப் போன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அவர்களில் அனேகர் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்கள், எதுவித பயிற்சியுமின்றி கட்டாயப்படுத்தி யுத்த களத்திற்கு அனுப்பப்பட்டவர்களுமாவர். அவர்கள் இடப்படும் கட்டளைகளை மீறி ஏன் என்று கேட்க முடியாமல் செய்து மடியவேண்டும்.

யுத்த காலத்தில் கடுமையான யுத்தக் குற்றங்கள் நடந்திருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் இன்று ஆதரவு கொடுக்கின்ற அரசாங்கம், மிகத் தெட்டத் தெளிவாக, போர் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு போர் வீரர் தன்னும்; குறுக்கு விசாரணை செய்யப்படுவதை அரசு அனுமதிக்காது என்று கூறியுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போர்க்குற்ற வழக்கில் உங்கள் சார்பாக சாட்சியமளிக்கப் போகும் முதற்சாட்சியாலேயே வழக்குத் தள்ளுபடி செய்யப்படும். நான் என்ன நோக்கில் இதைக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் உங்களுக்கு மேலும் சங்கடத்தை உண்டுபண்ண விரும்பவில்லை.

இறுதியாக கைதிகள் சம்பந்தப்பட்ட விடயம் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமில்லாவிடினும் அவசியம் கருதி குறிப்பிடப்பட்டது. மீண்டும் ஒரு தடவை, அரசியல் கைதிகளை பகுதி பகுதியாக இல்லாமல் எல்லோரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்பதைக் கேட்கவேண்டும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். தயவுசெய்து ஒன்றை உணருங்கள் - அரசு இந்த விடயத்தில் தாமதம் காட்டுவதற்கு மறைக்கப்பட்டுள்ள ஒரு காரணம் உண்டு என்பதையும் இக்கைதிகளை துரும்புச்சீட்டாக பாவிக்க வாய்ப்புண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். “ என்றுள்ளது.

0 Responses to போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்; ஆயினும், புலிகளை விசாரிக்க முடியாது: வீ.ஆனந்தசங்கரி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.