Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்கிடம் தெளிவுபடுத்தியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “பொருளாதார ரீதியான அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தனது அரசாங்கத்திடம் உதவியை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். யாழில் பல முன்னேற்றங்களை காண்கின்றோம். அரசியல் இன்று வரும் நாளை போகும். ஆனால், அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னரே, கொழும்பில் அது தொடர்பாக நான், அவரிடம் பேசினேன். பலாலி விமானதளம் தொடர்பாகவும் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கே.கே.எஸ்.துறைமுகம் அபிவிருத்தி, தனுஸ்கோடி தலைமன்னார் படகு சேவை ஆகியன தொடர்பாகவும் தாம் டெல்லியுடனும் பேசியுள்ளதாகவும் எமது அரசாங்கத்துடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தார். இதனைவிட, எமது அபிவிருத்தி செயற்றிட்டங்களைக் குறிப்பிட்டால் அது தொடர்பில் தம்மாலான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். அவருக்கு அரசியல் பற்றி பேச ஆர்வம் காட்டவில்லை. அபிவிருத்தி தொடர்பாக பேசினார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தால் கோரப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்தில் 50 பேருக்கு இடமிருந்த போதும், இதுவரை யாழில் 4 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், கூடியளவு இளைஞர் - யுவதிகளை குறித்தத் திட்டங்களில் பங்குபற்றி பயன் பெறுமாறு தெரிவித்தார்.

எமக்கு நன்மைகளை பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக அவருக்கு தெரியப்படுத்தினேன்.

முதலமைச்சர் நிதியம் தொடர்பில் 2, 3 வருடங்களாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு அதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தமையால், அதில் மாற்றங்களையும் ஏற்படுத்தி உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.

அவ்வாறான நிதியம் ஆரம்பிக்கப்பட்டால், எமக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை பெற்று எம்மாலான உதவிகளை வழங்கலாம் என தெரிவித்தேன். அது தொடர்பாக உரியவர்களுடன் பேசுவேன் எனவும் தெரிவித்தார்.” என்றுள்ளார்.

0 Responses to எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.