Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“அதிமுக அரசு விரைவில் கவிழும். அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரையாவது ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. விரைவில் தேர்தல் வரவாய்ப்புள்ளது. அந்தத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைக்கும்“ என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் குளம் தூர்வாரும் பணிகளை நேற்று செவ்வாய்க்கிழமை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த 6 ஆண்டு காலமாக நடைபெறும் அதிமுக ஆட்சியில் குளங்கள் தூர்வாரப்படவில்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது. திமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் இருக்கக்கூடிய குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. ஆனால், பருவமழை பொய்த்து, விவசாயிகள் எல்லாம் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்தில்கூட அதிமுக ஆட்சி அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் இருப்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

திமுக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆங்காங்குள்ள திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் எல்லாம் குளங்களை தூர்வாருகின்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை நான் விடுத்திருந்தேன். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்தின் பல இடங்களில் திமுகவின் முன்னோடிகள் குளங்களை தூர்வாருகின்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

திமுகவின் இந்தப் பணிகளை பார்த்த பிறகாவது இந்த ஆட்சி விழிப்படைந்து இருக்கும் என்று நாங்கள் கருதினோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே மேட்டூர் அணையை தூர்வாரப்போகிறோம் என்று சொல்லி, விளம்பரத்துக்காக மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு, அடையாளத்துக்காக அந்தப் பணியை தொடங்கிவைத்து, பிறகு அந்தப் பணியை கிடப்பில் போடப்பட்டு விட்டார்கள்.

சட்டப்பேரவை கூடும் வரையில் இந்த ஆட்சி நிலைக்குமா என்பதே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, ஆட்சி நிலைத்து அதன் பிறகு சட்டப்பேரவை கூடும்போது, திமுக தனது ஜனநாயக கடமையை நிச்சயம் ஆற்றும். அதிமுகவை பொறுத்தவரையில், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் ஓரணியாக இருந்தது. அவர் மறைந்த பிறகு 2 அணிகளாக மாறி, இப்போது 3 அணிகளாக பிரிந்திருக்கிறது. போகின்ற போக்கைப் பார்த்தால் இன்னும் எத்தனை அணிகள் உருவாகப் போகின்றன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to அதிமுக அரசு விரைவில் கவிழும்; திமுக ஆட்சியமைக்கும்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.