Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று வழிநடத்தல் குழுவின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்சளவில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு சகல கட்சிகளும் இணங்கியிருப்பதுடன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிரிவினை நீங்கி, முதலமைச்சர்களுக்கான அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டாலும் நாட்டு மக்களே இறுதித் தீர்மானம் எடுப்பார்கள் என, அரசியலமைப்பு சபை செயலகத்தால் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1972ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்பு சபையின் இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

எனினும், 1947ஆம் ஆண்டு சிலோன் சுதந்திர சட்டத்தின் அடிப்படையாக முதலாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டமை முரண்பாடாக இருந்தது. எனினும், அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் முடிவுக்கு அமையவே இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.

தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு அமைய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டது. இரண்டு தெரிவுக்குழுக்களில் ஒரு குழு அரசியலமைப்பு வரைபை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தது. அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

எனினும், தற்பொழுது நாம் முன்னெடுத்திருக்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடு முற்றிலும் மாறுப்பட்டதாகும். அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்மானம் எடுக்கப்படும். அதாவது அரசியலமைப்பு மறுசீரமைப்பில் இறுதி முடிவை எடுப்பது நாட்டு மக்களே. சட்டத்தை அங்கீகரிக்கும் பொறுப்பு பாராளுமன்றத்திடமே உள்ளது.

அரசியலமைப்பு சபையின் செயற்பாடு என்னவெனில் கலந்துரையாடி அரசியலமைப்பு வரைபொன்றை தயாரித்து அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதே ஆகும். இதற்கான செயற்பாடுகளிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம். பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. பொது மக்களின் கருத்துக்களையும் பெறப்பட்டே அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைய வேண்டும் என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு தொடர்பான விடயம் பொது மக்களிடம் வரவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த விவகாரம் இன்னும் அரசியலமைப்பு சபைக்கு வரவில்லையென்பதாலேயே பொது மக்களின் நிலைப்பாடுகள் பெறப்படவில்லை. அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகளை முடிவுசெய்வது வழிநடத்தல் குழுவாகும். அத்துடன் அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையொன்றை வழிநடத்தல் குழு தயாரிக்கும்.

அரசியலமைப்பு தொடர்பான அறிக்கைக்கும், அரசியலமைப்பு வரைபுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பதிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம். வழிநடத்தல் குழு ஆறு உபகுழுக்களை நியமித்து அவற்றின் அறிக்கையை பெற்றிருந்தது.

தற்பொழுது இடைக்கால அறிக்கையொன்றை தயாரிக்கும் பணிகளில் வழிநடத்தல் குழு ஈடுபட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருந்தபோதும், ஓகஸ்ட் மாத இறுதியில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கான தளமாக வழிநடத்தல் குழு அமைந்துள்ளது. பல்வேறு விடயங்களில் சகலரினதும் மனசாட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. சகல தரப்பின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இடைக்கால அறிக்கையை நாம் முதலில் சமர்ப்பிக்கவுள்ளோம். இடைக்கால அறிக்கையில் கொள்கையளவில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இது முதலாவது குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கும் முறையுடன் ஒப்பிடுகையில் வித்தியசமானது.

சபையில் பிரிவுகளை ஏற்படுத்தும் அறிக்கையை அனுப்ப நாம் விரும்பவில்லை. நாம் சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்து பொது மக்களின் கருத்துக்களையும் பெற்று அதனை சபையில் விவாதிக்க வேண்டும். இடைக்கால அறிக்கை பற்றி மக்களின் கருத்துக்களையும் பெற்று அதனை சபையில் விவாதித்த பின்னர் முழுமையான அறிக்கையை அரசியலமைப்பு சபையில் முன்வைத்து விவாதித்து அதனை பாராளுமன்றத்துக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம். அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதாவது நாடு பிரிக்கப்படக்கூடாது என்பதில் சலரும் இணங்கியுள்ளனர். மாகாணங்களுக்கு அதிகூடிய அதிகாரப்பகிர்வு வழங்குவது பற்றியும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சகல அரசியல் கட்சிகளும் மாகாண நிர்வாகத்தில் அனுபவத்தைப் பெற்றுள்ளன. 13வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு இந்த வருடத்துடன் 30 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் முன்னர் இருந்த பிரிவுகள் தற்பொழுது இல்லை. ஒரேயொரு பிரிவு மாத்திரமே தற்பொழுது உள்ளது. அதாவது, முதலமைச்சர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது மாத்திரமே. அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிரிவினை நீங்கி, மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலேயே பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் பிரதான கட்சிகளுக்கிடையில் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

பௌத்த மதத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. அதேநேரம், ஏனைய மதத்தவர்களும் தங்களுடைய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மற்றுமொரு விடயம் அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமாகும். இத்திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கான அதிகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது பற்றி விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. செனட் சபையொன்றை உருவாக்குவதற்கு சகலரும் இணங்கியுள்ளனர். எனினும், உறுப்பினர்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. அதேநேரம், அரசியலமைப்பை மேம்படுத்தும்போது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் விடயங்களுக்குச் செல்வதா இல்லையா என்ற விடயமும் கலந்துரையாடப்படுகிறது.” என்றுள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஓகஸ்ட் மாதம் வெளியாகும்: ரணில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...