Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன.

சில தரப்புக்கள் குறித்த அறிக்கையை ‘அழுகிய’ விசாரணை அறிக்கையாக பெயரிடுகின்றன. இன்னும் சில தரப்புக்கள், கட்சி அரசியல் சார் நிகழ்ச்சி நிரலின் போக்கில், குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு ‘வேண்டாத சிலர்’ பழிவாங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றன. அத்தோடு, இப்படியொரு விசாரணைக்குழுவோ, அதன் அறிக்கையோ அவசியமில்லை என்று அங்கலாயத்துக் கொண்டிருக்கின்ற தரப்புக்களும் உண்டு.

ஆனால், மக்களினால் தேர்தெடுக்கப்பட்ட சபையாக, வடக்கு மாகாண சபையும், அதன் அமைச்சரவையும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வெளிப்படைத்தன்மை பற்றிய விடயத்தில் நம்பகத்தன்மையை பெற வேண்டியது அவசியம். அதுதான், எதிர்காலத்திலும் தமிழர்களினால் ஆளப்படுகின்ற நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த உதவும்.

மாறாக, “இவங்களுக்கு அவங்களே பரவாயில்லை” என்கிற தோரணையிலான மன உணர்வினை மக்களிடம் விதைப்பது அபத்தமானது. ஆக, அதன்போக்கில், வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணையும், அதன் அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவை அமைப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டா? என்கிற கேள்வியை சட்ட வல்லுனர்கள் சிலர் எழுப்புவதையும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும், அந்தக் கேள்வியின் சுரத்தையை அதிகரிப்பது தொடர்பில் அவர்களுக்கு சற்று தடுமாற்றம் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எது எவ்வாறாயினும், அது தொடர்பில் சட்ட வல்லுனர்கள் தெளிவாகப் பேசுவது நல்லது.

அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில், தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போதிய ஆதாரங்கள் உள்ளடக்கப்படவில்லை. எடுமானங்களின் போக்கில் அமைச்சர்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்கிற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அந்த அறிக்கையை முழுமையான வாசிக்கின்ற போது, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களில் நான் குறிப்பிட்டளவு உடன்படுகின்றேன். என்னிடமிருந்த அடிப்படைக் கேள்விகள் சிலவற்றுக்கு அங்கு பதில்கள் காணப்படுகின்றன. அவை, அமைச்சர்களிடம் நடத்திய விசாரணைகளிலிருந்து கிடைத்திருக்கின்றன என்பது தெளிவு.

குறிப்பாக, சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு விவகாரத்தில் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், நிபுணர் குழுவொன்றை எவ்வாறு அமைத்தார்? அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா? அந்த நிபுணர் குழுவில் தகுதி வாய்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டார்களா?, அவர்கள் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டனரா? அந்தக் குழுவின் அறிக்கையை மக்களிடம் சேர்ப்பிப்பதில் அமைச்சர் காட்டிய ஆர்வம் எதோடு சம்பந்தப்பட்டது? என்பவை சார்ந்தது.

அப்படியாயின், சுன்னாகம் கிணறுகளில் மக்களாகவே கழிவு எண்ணெய்யைக் கொட்டினார்களா என்று… கொடி பிடிப்பவர்கள் சொல்ல வேண்டும். (ஆனாலும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருக்கின்றது என்பதை நீதிமன்றத்திலேயே ஏற்றுக்கொண்டிக்கின்றது.)

அடுத்து, வடமராட்சிக் கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் பதவி நீக்கம் தொடர்பிலான விடயம். அதில், ஐங்கரநேசன் எவ்வாறான அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்திருக்கின்றார் என்பது சார்ந்தும் உரையாடப்பட வேண்டும். ஏனெனில், அந்த விடயம் தொடர்பில் அறிக்கை தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. இப்படி ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.

கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவோ தன்னுடைய முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கின்றார் என்று நினைக்கிறேன். அவர் பதவி விலகுவது தொடர்பில் சிந்தித்திருப்பதாகவும் அறிய முடிகின்றது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

குறிப்பாக, குருகுலராஜா மீது சிறீதரனே அதிகார துஷ்பிரயோகத்துக்கான தூண்டுதல்களை மேற்கொண்டிருக்கின்றார் என்பது. இது, தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியும் கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்த வேண்டும்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் விசேட அமர்வின் போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் என்னென்ன விடயங்களை கவனத்தில் கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால், குற்றமிழைத்தவர்களாக கருதப்படுகின்றவர்களை, போதிய விளக்கங்கள் ஏதுமின்றி அந்தப் பதவிகளில் தொடர அனுமதிப்பது என்பது, பெரும் அவமானத்தின் அடையாளமாக இருக்கும். அது, அடிப்படைத் தார்மீகத்தினை மீறுவதாகும்.

இங்கு கட்சி அரசியல் சார் விடயத்தில் அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டியது. ஆரம்பத்திலேயே இவ்வாறான மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களைத் தண்டித்து வைப்பதுதான், எதிர்காலத்துக்கான நம்பிக்கைளை சரியாக விதைக்கும். மாறாக, விசாரணை தேவையில்லை என்று கூறி வெள்ளையடிக்கும் போக்கில் செயற்படுவது சிறுபிள்ளைத்தனமானது. அது, ஊழல் எனும் பெரும் சாக்கடைக்குள் எமது மக்களை மூழ்கடித்து நாறிப்போக வைக்கும். அப்போது, மக்கள் மீட்சி பெறுவதே சாத்தியப்படாது.

இலங்கையில் விசாரணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் கணிகாணிப்புக்குழுக்கள் என்பன அவ்வப்போது அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அதிகமானவை, இன மோதல் கால குற்றங்கள் மற்றும் சம்பவங்களை ஆராய்வதற்கானவை. அதற்கு அடுத்து அதிகமானவை, ஊழல் மோசடிகளுக்கு எதிரானவை. ஆனால், அந்தக் குழுக்களின் இறுதி அறிக்கைகளோ, அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளோ அரசாங்கங்களினால் என்றைக்குமே கணக்கில் எடுக்கப்பட்டதில்லை. யாரும் பெரிதாக தண்டிக்கப்பட்டதுமில்லை. அவை பெரும்பாலும் கண்துடைப்புக்கானவை. அதற்கான அண்மைய உதாரணம், ‘நல்லிணக்க கலந்தாலோசனைக்கான செயலணி’யின் அறிக்கையும், பரிந்துரைகளும்.

மேற்கண்ட தென்னிலங்கையின் அடிப்படைகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடக்கு மாகாண சபையும் பற்றிக் கொள்ளப் போகின்றார்களா என்கிற கேள்வியும் எழுகின்றது. ஆம், என்றால், அது மீண்டுமொரு பெரும் வீழ்ச்சிக்கான ஆரம்பமாக இருக்கும்.

வடக்கு மாகாண அமைச்சர்களின் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை மாத்திரமல்ல, சம்பந்தப்பட்ட கட்சிகளும் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எதுவுமே தேறாது...!

-புருஜோத்தமன் தங்கமயில்

0 Responses to வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து!

Post a Comment

Followers