Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் நிலவி வரும் சமாதானத்தை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கெடுக்க முயற்சிக்கக் கூடாது என இன்று வெள்ளிக்கிழமை சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜூன் 26 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டிரம்பினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பின் போது இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களும் பேசப் படவுள்ளதால் தென் சீனக் கடல் விவகாரமும் இதில் அடங்கும் என்ற சூழல் நிலவும் பட்சத்தில் சீனா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷுவாங் இடம் கேள்வி எழுப்பப் பட்ட போது தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் நிலமை ஸ்திரம் அடைந்து வருவதாகவும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான இந்தோ பசுபிக் பிராந்திய பேச்சுவார்த்தையில் தென் சீனக் கடலும் உள்ளடக்கப் படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெங் மேலும் தெரிவிக்கையில்  சீனாவுக்கும்  ஏசியான் (ASEAN) நாடுகளுக்கும் இடையே  அண்மைக் காலமாக மேற்கொள்ளப் பட்டு வந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தென்  சீனக் கடல் விவகாரம் ஸ்திரமடைந்து வருகின்றது என்றும் இதை இப்பிராந்தியத்துடன் தொடர்பில்லாத நாடுகளும் மதிக்க வேண்டும் என சீனா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். தென் சீனக் கடலின் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளினது இறையாண்மையினையும் சீனா தனக்கு உரிமை கோரியுள்ள நிலையில் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புரூனேய் மற்றும் தாய்வான் ஆகிய  நாடுகளும் சில பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருகின்றன.

தென் சீனக் கடலும் கிழக்கு சீனக் கடலும் மிக அதிகளவு இயற்கை வளங்கள்,  எண்ணெய் வளம் மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருப்பதால் அவை உலகளாவிய வர்த்தகத்துக்கு உகந்த பயன்பாட்டையும் தமதாக்கியுள்ளன. இதனால் இப்பிராந்தியத்தின் பெரும் பகுதியை சீனா தனது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்துள்ளது. அண்மையில் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கக் கடற்படை Freedom of navigation என்ற தனது  யுத்தக் கப்பலை தென் சீனக் கடலில் உள்ள செயற்கைத் தீவு ஒன்றிட்கு அனுப்பி வைத்திருந்தது.

இது இப்பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கு ஏற்பட்ட ஆபத்து என்றும் சீனாவின் இறையாண்மையை மதிக்காத ஆத்திரமூட்டும் செயல் என்றும் இது போன்று பொறுப்பற்ற தனமாக அமெரிக்கா நடக்கக் கூடாது என்றும் சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவும் இந்தியாவும் தென்சீனக் கடலில் நிலவும் சமாதானத்தைக் கெடுக்கக் கூடாது! : சீனா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.