Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள 64 வீதமாக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அந்த மக்களின் ஆணையை நிறைவேற்றுவதில், அரசாங்கம் அக்கறையோடு செயற்படுகின்றது. புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்று கூறுபவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்கள் விரும்பும் அரசியலமைப்பு ஒன்றை இப்பொழுது வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களின் கருத்து என்னவென்று எமக்கு புரியவில்லை. அன்று 13வது திருத்த்தின் மூலம் அதிகாரம் பகிரப்பட்டபோது கூக்குரல் எழுப்பினர்.

ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தின் கருத்தையும் அறிந்து பொதுமக்களின் கருத்தையும் அறிந்து இதனை முன்னெடுக்கவுள்ளார். புதிய அரசியலமைப்பின் அவசியத்தை கடந்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களித்த பெரும்பான்மை மக்களுள் பௌத்த மத பிக்குகள், மத குருமார்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை மக்களுக்கு வழங்குவதற்கே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படுகின்றது. இதில் ஒரு தரப்பு வேண்டாம் என்கின்றனர். இவர்கள் மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பவர்களா?

1958ஆம் ஆண்டு தந்தை கிளித்தெறிந்த அரசியலமைப்பு திருத்தத்தை அவரது மகளான முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1998ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழ்மொழியை அரச மொழியாக்கினார்.

1972ஆம் ஆண்டு மக்களின் விருப்பம் அறியப்படாமல் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. இது அப்பொழுதிருந்த பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கே ஆகும்.

1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவந்தார். இதுவும் அவரது அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கே ஆகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பில் 18வது திருத்தத்தை மக்களின் விருப்பத்தை அறியாது கொண்டுவந்தார். இதுவும் அவரது அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கே ஆகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டார்.

இவ்வாறு அதிகாரம் அதிகரிக்கப்பட்ட இந்த அரசியலமைப்பின் மூலம் அதன் அதிகாரங்களை மக்களுக்கு வழங்குவது தவறா? இதனை ஏன் எதிர்க்கின்றார்கள்? மாகாண சபை 13வது அரசியலமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனை அன்று எதிர்த்தவர்கள் இன்று சபையிலிருந்துகொண்டு தாம்தான் மாகாண சபையை நிர்வகிக்கும் றிமோட்கொன்றோல் என்று தெரிவிக்கின்றனர். மாகாண சபை முறையை அமுலுக்கு கொண்டுவந்த பொழுது பலரை கொலை செய்தனர். நாட்டுக்கு கேடானது என்று விமர்சித்தனர். இன்று மாகாண சபைகளில் இருந்துகொண்டு செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

பொதுமக்களின் கருத்தறியும் சர்வஜெனவாக்கெடுப்பு சிறப்பானதாகும். இது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பில் இருந்த விசேட அம்சமாகும். இதன் மூலம் மக்களின் கருத்தை அறியவுள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயத்தில் பெருந்தன்மையுடனேயே நடக்கின்றார். பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை அவர் விரும்பவில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விரும்பத்துடனான அரசியல் தீர்வையே அவர் விரும்புகின்றார். அவரது ஜனாநாயக சிறப்பம்சத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்புக்காக 64 வீதமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com