Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடமாகும். அதற்கும் மேலாக எதுவும் இருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெட்டத்தெளிவாக அறிவித்திருப்பது நல்ல விடயம். அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் நீரியியல் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆட்சி மாறிய போதிலும் காட்சி மாறவில்லை என எம்மில் பலர் கூறி வருகின்றனர். அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதால் காட்சி மாற்றங்கள் தெளிவாகத் தெரியவில்லை. மக்களின் காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் துரித நடவடிக்கை அவசியம்.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக் கொள்வது குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் வாங்கவில்லை. பிறிதொரு தினத்தில் அதனை விவாதத்துக்கு எடுக்கும் என சபை முதல்வர் கூறியுள்ளார். இது முக்கியமானதொரு சட்டம். ஏன் இதனை விவாதிக்க அரசு பின்வாங்கியது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி முதற்தடவையாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒப்பந்தத்தை அல்லது அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம். இது சிறப்பாக கைகூடவேண்டும். தோல்வியில் முடிந்ததாக இருக்கக் கூடாது. தோல்வியடைவதாக இருந்தால் நல்லிணக்கம் தோல்வியடைந்ததாகவே அமையும்.

நல்ல சிந்தனையோடு முற்போக்கு சிந்தனையோடு அமைந்த தேசிய அரசாங்கத்தின் ஒரே நோக்கம் புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்பட வேண்டும். இந்தப் பணியில் நாம் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பல தாமதங்கள், இடையூறுகள் மற்றும் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறான இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்த்திருக்க முடியாது. இடையூறுகள் வந்தாலும் அரசாங்கம் முன்வைத்த காலை பின்வைக்காது அரசியலமைப்புத் தயாரிப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம்; அதற்கு மேலாக எதுவும் இருக்க முடியாது: சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com