Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

இந்த மணிமண்டப பணிகளுக்கு கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 9 மாதங்களாக பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகம், கோவா உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 450 தொழிலாளர்கள் இரவு- பகலாக பணிசெய்து மணிமண்டபத்தை உருவாக்கினர். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் இந்த சாதனையை செய்து முடித்து அப்துல்கலாமின் 2வது ஆண்டு நினைவு தினத்தன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

மணிமண்டபத்தில் பதிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற கற்கள் இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிற கற்கள் ஆக்ராவில் இருந்தும், தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் கிருஷ்ணகிரியில் இருந்தும் கொண்டுவரப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. இந்த கற்களின் மீது தினசரி 3 ஆயிரம் பேர் நடந்தாலும் தேயாத வகையிலும், சேதமடையாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உப்புக்காற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள பெயிண்டு கட்டிடம் முழுவதும் பூசப்பட்டு உள்ளது.

நினைவு மண்டபத்தின் முன்பக்க நுழைவு வாயில் கதவு மலேசிய தேக்கு மரத்தால் உயர்ந்து நிற்கிறது. காரைக்குடி செட்டிநாட்டு தச்சர்கள் இந்த பிரமாண்ட கதவை உருவாக்கி உள்ளனர். கதவுகள் ஒவ்வொன்றும் தலா 250 கிலோ வீதம் 500 கிலோ எடை கொண்டதாகும். மணிமண்டபத்தின் உள்பகுதியில் ஜனாதிபதி மாளிகையின் தோற்றம் ஓவியமாக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. மண்டபத்தின் 4 மூலைகளிலும் 4 வகையான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்பதால், குழந்தைகளுடன் விளையாடுவதுபோன்று முதல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

2வது சிலை அறிவியல் சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை பார்வையிடுவது போல அமைக்கப்பட்டுள்ளது. 3-வது சிலை குழந்தைகள் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகம் படிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், 4வது சிலை குழந்தைகள் ஒருவரையொருவர் கை தூக்கிவிட்டு உதவி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் பகவத்கீதை புத்தகமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத்தின் சுவர்களில் அமெரிக்க பாராளுமன்றத்தில் அப்துல்கலாம் பேசுவது, வீணை வாசிப்பது, குடியரசு தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவது, குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் காட்சி. குடியரசுத் தலைவராக பதவி ஏற்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வருவது, உலக தலைவர்களுடன் பேசுவது போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அப்துல்கலாம் சமாதி முன்பாக வட்டவடிவத்தில் பிரார்த்தனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சமாதியில் இருந்து கண்ணாடியில் அவரது உருவத்தை பார்க்கும் வகையில் கலாமின் 6 அடி உயர முழு உருவ வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடம் அருகில் 63 அடி உயரத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் வைக்கப்பட்டு உள்ளது. மணிமண்டபத்தின் அருகே அறிவுசார் மையம், கலையரங்கம், கோளரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் கண்ட பசுமைத் திட்டத்தின் கீழ் வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

0 Responses to கலாநிதி அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு!

Post a Comment

Followers