Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மக்களைப் பற்றியோ, மாணவர்களைப் பற்றியோ ஆளும் அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நீட் தேர்வால் ஏழை– எளிய, கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் பல துன்பங்களுக்கும், அல்லல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் கொடுமை தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, உடனடியாக நீட் தேர்வுப்பிரச்சினைக்கு ஒரு முடிவை இந்த அரசு காண வேண்டும்.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில், அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தாலும், ஜனாதிபதி வரை சென்று அதற்கு அழுத்தம் கொடுத்து, ஒப்புதலை எப்படிப் பெற முடிந்ததோ, அதேபோல், நீட் தேர்வை பொறுத்தவரையில், இதே சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்களை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என எல்லாக்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பிவைத்து, அது டெல்லிக்கு சென்றதே தவிர ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது பின்னர்தான் தெரிந்துகொண்டோம்.

ஆக, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிற இந்த நேரத்தில், ஒரு நல்ல வாய்ப்பு இந்த அரசுக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா நிறுத்தக்கூடிய வேட்பாளருக்கு ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆதரவு தர வேண்டும் என்று சொன்னால் நீட் தேர்விற்கு ஒரு முடிவினை நிச்சயமாக அவர்களால் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை அவர்கள் தவறவிட்டு விட்டார்கள்.

இப்போது ஒன்றும் குடி மூழ்கி போய்விடவில்லை, அடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலை பயன்படுத்தியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வு பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை, தமிழகத்தில் உள்ள ஏழை–எளிய மாணவர்களுக்கு உருவாக்கி தருவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை நான் அவையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துவைத்தேன். ஆனால், அந்தத்துறையினுடைய அமைச்சர், முதல்–அமைச்சர் ஆகியோர் ஒரு வார்த்தை கூட எழுந்து பதில் சொல்ல விரும்பவில்லை. இதிலிருந்தே மத்திய அரசிற்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரிகிறது.

அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறபோது கூட, நடந்திருக்கக்கூடிய சம்பவங்களை பற்றித்தான் சொல்கிறாரே தவிர, நடக்கக்கூடியவற்றை சொல்லவில்லை. நான் கேட்ட கேள்விக்கு எந்தவித பதிலையும் தராத நிலையில் விளக்கம் தந்தாரே தவிர, வேறு விளக்கம் தரவில்லை. எனவே, அதில் எங்களுக்கு திருப்தி இல்லாத காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி, எங்களுடைய கண்டனத்தை நாங்கள் அவையில் தெரிவித்துவிட்டு, அதற்கு அடையாளமாக வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to மக்களைப் பற்றியோ, மாணவர்களைப் பற்றியோ தமிழக அரசு கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com