Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து பா.டெனிஸ்வரனை நீக்கக் கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் நேற்று வியாழக்கிழமை குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்து, வடக்கு மாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட கடிதத்தில், வேறு சில வடக்கு மாகாண சபை உறுப்பினர்களோடு இணைந்து, எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கையெழுத்திட்டதன் மூலம், அவர் அங்கம் வகிக்கும் எமது கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் தன்னிச்சையாகவும், நன்கறியப்பட்ட எமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும், மாறாகவும் செயற்பட்டுள்ளார் என்பதால், எமது கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் டெனிஸ்வரன் இழந்துவிட்டிருப்பதாக எமது கட்சி மேலும் தீர்மானித்துள்ளது.

இந்த அடிப்படையில், டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதெனவும் எமது கட்சி மேலும் தீர்மானித்துள்ளது.

ஆகவே, பா.டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு எமது கட்சியின் சார்பில் நான் தங்களை வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் நாங்கள் தங்களுக்கு அறியத்தருவோம்.” என்றுள்ளது.

0 Responses to டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ கடிதம்!

Post a Comment

Followers