Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாள் வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்களைக் கண்டறிவதற்காக விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்போடு பொலிஸார் தேடுதல் வேட்டைகள் மற்றும் சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படும்வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு பொலிஸார் மீது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஆயுதக் குழுவினர், வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ் மா அதிபர், யாழ் குடாநாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் நேரில் சென்று பார்வையிட்ட அவர், யாழ் பொலிஸ் நிலையத்தில் குடாநாட்டின் சகல பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்திருந்தார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து கவலையடைவதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைமைகள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது என்பதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையா நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மீதான வாள்வெட்டுத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகையில், “நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதக்குழுவினர் வாள்களால் கடுமையாக வெட்டியுள்ளனர்.

ஆறு அல்லது ஏழு மோட்டார் சைக்கிள்களில் 14 முதல் 15 பேர் கொண்ட குழுவே இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தக் குழுவுக்குத் தலைமைதாங்கியவர் முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் என்றும், ஆவா குழுவின் உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சத்திரகிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேல்நீதிமன்ற நீதிபதியின் மெய்பாதுகாவலர் மீதான தாக்குதல், பொலிஸாரின் மீதான வாள்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது . யாழ் குடநாட்டில் இடம்பெறும் சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்குமாறு மக்களிடமும், ஊடகங்களிடமும் கோரிக்கைவிடுக்கின்றேன்.

குற்றச்செயல்கள் குறித்து ஏதாவது தகவல்கள் தெரிந்தால் 0717582222 அல்லது 0718592020 என்ற தனது தொலைபேசி இலக்கங்கள் மூலம் நேரடியாகத் தெரியப்படுத்த வேண்டும். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. எந்தவிலைகொடுத்தாலும் சகலருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸ் நடவடிக்கை எடுக்கும்.” என்றுள்ளார்.

அதேநேரம், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு மற்றும் மண் அகழ்வு போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்றிலும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டிருந்தார். இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டிருந்தனர்.

0 Responses to வன்முறைக் குழுக்களைக் கண்டறியும் நோக்கில் முப்படையினரின் ஒத்துழைப்போடு யாழ். குடாநாட்டில் சுற்றிவளைப்புக்களை நடத்த தீர்மானம்: பொலிஸ் மா அதிபர்

Post a Comment

Followers