Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காக பௌத்த பீடங்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

“பௌத்த பீடங்களின் மகா நாயக்கர்களுக்கு புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பற்றி தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம். எனவே கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பௌத்த பீடங்களைச் சந்திக்க வேண்டும் என நான் கோரியிருக்கின்றேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் தங்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக பூர்த்தி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களையோ செய்யக்கூடாது எனக் கூறியிருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் தாமாக முன்வந்து தேசிய அரசாங்கமாக ஆட்சியில் அமர்ந்து முற்போக்கு சிந்தனையுடன் இச்செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதற்கே ஆணை வழங்கியிருந்தனர். அவ்வாறிருக்கையில் தற்போது அதிவணக்கத்துக்குரிய சமயத்தலைவர்கள் இவ்வாறான அறிவிப்பை விடுத்திருப்பது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சமயத்தலைவர்கள் இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் பொதுவானவர்கள். அவர்களைச் சந்தித்து எமது நிலைப்பாடுகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக தற்போது எழுந்துள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளை மாற்றியமைக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த பௌத்த பீடங்களை சம்பந்தன் சந்திக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...