Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து தடைசெய்யப்பட்ட படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை, காரைநகர், நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னிரவு முதல் கடற்படையினர் பாரிய சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாகவும் இதன்போது 49 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 12 ரோலர் படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் சமிந்த வலாக்குழுகே தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களால் இலங்கை கடற்படை வீரரொருவர் கடத்தப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என தெரிவித்த அவர், அச் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவ்வாறு இலங்கை கடற்படை வீரரொருவர் கடத்தப்பட்டிருந்தால் அவரது படத்தை வெளியிட்டிருக்க வேண்டுமே என்றும் கடற்படை பேச்சாளர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படையினர் பலவந்தமாக கைதுசெய்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் செய்தியையும் அவர் முற்றாக நிராகரித்தார். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையெனவும் அதற்கான அவசியம் கடற்படைக்கு கிடையாதெனவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 49 இந்திய மீனவர்களையும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில் பிரதிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்ததாகவும் ஒரே தடவையில் இந்தளவு அதிகமான இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாலேயே இந்திய ஊடகங்கள் இலங்கை கடற்படை தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே சமயத்தில் 600 – 700 படகுகள் எமது கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்து தடைசெய்யப்பட்ட படகுகள் வலைகள் மூலம் எமது கடல் வளங்களை அழிப்பதை நாம் எவ்வாறு பார்த்துக்கொண்டிருக்க முடியும் என குறிப்பிட்ட அவர், வடக்கு மீனவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது ஓரளவு முன்னேற்றமடையும் இத்தருணத்தில், கடுகளவும் மனச்சாட்சியில்லாமல் அவர்களுக்குரிய கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருவதை அனுமதிக்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடித்த 49 இந்திய மீனவர்கள் கைது!

Post a Comment

Followers