Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரச்சினைகளில் 51 வீதத்துக்கு தீர்வுகண்டுவிட முடியும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், சகவாழ்வு, தேசிய மொழிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் சில செயற்றிட்டங்களுக்கு வைக்கப்படுகின்ற சிங்கள பெயர்களை, தமிழ் மக்களும் அவ்வாறே உச்சரிக்க வேண்டும் எனக் கூறுவது சட்டவிரோதமானது. தேசிய மொழியை தமிழ் மொழியில் பாடமுடியாத நிலைமையொன்று காணப்பட்டது. எனினும், இந்த நிலை மாறியிருப்பதுடன், ‘ஶ்ரீலங்கா தாயே’ எனப் பாடும்போதே நாமும் இலங்கையர் என்ற உணர்வு தமிழர்களுக்கும் ஏற்படும்.

எனவேதான் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற சகல சிங்கள பெயரைக் கொண்ட செயற்றிட்டங்களுக்கும் பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளேன். எல்லா அமைச்சர்களும், அமைச்சுக்களும் தமது செயற்றிட்டங்களுக்கு சிங்கள மொழியில் பெயரை வைக்கும்போது அவற்றுக்கான தமிழ் பெயரை கண்டுபிடித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோல, தமிழ் மொழியில் செயற்றிட்டங்களுக்கு பெயர் வைக்கப்பட்டால் அவற்றுக்கான சிங்கள மொழிபெயர்ப்பையும் வழங்குவோம்.

அரச நிறுவனங்களில் படிவங்களைத் தேடியெடுத்து மொழிபெயர்ப்பு செய்யவுள்ளோம். 429 பிரதேச செயலகங்கள், 197 ஏனைய காரியாலயங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழுள்ள 254 அலுவலகங்களில் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இதற்காக மொழிபெயர்ப்பாளர் குழாமொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி நாடு முழுவதிலுமுள்ள பெயர் பலகைகள் மூன்று மொழிகளிலும் இருக்க வேண்டும். தமிழில் சிறிதாக எழுதியிருப்பதால் தமிழர்கள் அவற்றை வாசிப்பதற்கு கண்ணாடிகளை கொடுக்க வேண்டிவரும். பெயர் பலகைகளில் தமிழ் மொழி இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் இன்றி எழுதப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவுள்ளோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெயர்ப்பலகைகள் முதலில் தமிழ் மொழியிலும், பின்னர் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே ஒழுங்காகும். நாடு முழுவதிலும் 3300 மொழி அதிகாரிகளை நியமிக்கவேண்டிய தேவை உள்ளது.

நாட்டில் உள்ள சகல பிரிவுகளிலும் மொழி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டியிருப்பதாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துச் செல்ல முடியாதுள்ள இளைஞர், யுவதிகளை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு மொழிப் பயிற்சி வழங்கி நியமிக்க எதிர்பார்த்துள்ளோம். இவர்களின் ஊடாக சகல அரசாங்க நிறுவனங்களிலும் தமிழ் மொழியிலும் பதிலைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும். தேசிய பிரச்சினைக்கு பிரதான காரணம் இந்த மொழிப்பிரச்சினையாகும். அதாவது தேசிய பிரச்சினையில் 51 வீதம் மொழிப்பிரச்சினையாகும். எஞ்சியதே அதிகாரப்பகிர்வாகும்.” என்றுள்ளார்.

0 Responses to மொழிப் பிரச்சினையைத் தீர்த்தாலே தேசியப் பிரச்சினைகளில் 51 வீதமானவை தீர்ந்துவிடும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com