Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியமை மூலம் புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கட்சியின் உபதலைவர் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்தார். ஜனாதிபதியைச் சந்தித்தும் இதனை அவர் கூறியிருந்தார். புதிய கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளோம். சாதாரணமாக பிழை செய்தவர்கள் அல்லது பிழை செய்ததாக நிரூபிக்கப்பட்டவர்களே பதவி விலகுவார்கள். ஆனால், விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்பதைக் காண்பிப்பதற்கான முன்னுதாரணமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை விசாரணைக்கு எடுத்துகொள்ள முடியாவிட்டாலும், இதற்கு முன்னர் மோசடிக்காரர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர். தற்பொழுது அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதை நாம் நோக்கவேண்டியுள்ளது. நாம் எவ்வாறான முன்னுதாரணத்தை கொண்டுவந்துள்ளோம் என்பதையிட்டு தற்பொழுது விவாதத்தை நடத்தலாம். கடந்த காலத்தில் அமைச்சர் ஒருவர் ஆணைக்குழுவுக்கு முன்னால் சென்றுள்ளாரா?. கருத்துத் தெரிவித்தார் என்பதற்காக எங்கேயாவது அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளாரா?

ரவியின் விலகல் மூலம் புதிய கலாசாரமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம், யாராவது ஒருவரை திருடர் என்று கூறினால் அந்த நபரை கட்சியிலிருந்து விலக்குவோம். திருடர்களை வைத்திருப்பதால் பலனில்லை.

நான் யார் மீதும் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. கட்சியில் திருடர்களை வைத்திருப்பதில்லையென்ற கொள்கையைக் கூறும்போது ஆளும் கட்சியில் உள்ள எவரும் குழம்பவில்லை. ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் குழம்புகின்றனர். மணல் கொள்ளையர்கள், கரம்போட் கொள்ளையர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சுனாமி திருடர்கள் இருந்தால் அவர்கள் குழம்புவதில் நியாயம் உள்ளது.

கடந்த 10 வருடங்களில் அவர்களால் இவ்வாறானதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியாது போயிருந்தது. லசந்த விக்ரமதுங்கவை கொன்றனர், எக்னலிகொடவை கடத்தினர்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதிமன்றம் சென்று இடைக்கால தடையுத்தரவு பெறவில்லை. தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு பின்வரிசையில் சென்று அமர்ந்துவிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் பிரியஷாந்த டெப்புக்கு என்ன நடந்தது. அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் சரியில்லையெனக் கூறியதால் அவரை சட்டமா அதிபராக நீதிமன்றத்துக்கு அனுப்பினார். இருந்தும் அவருடைய திறமை காரணமாக அவர் தற்பொழுது பிரதம நீதியரசராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

சுதந்திரம் இருப்பதால் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன. அக்காலத்தில் நாம் பதவிவிலகுமாறு கோரிய போது ஊடகங்கள் எம்மை துரோகிகள் என்றனர். இன்று சகலரும் திருடர்களாக இருக்கின்றனர். ஆனால் தற்பொழுது புதிய யுகமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வார இறுதியில் கதைத்தோம். என்னை கடந்த வெள்ளிக்கிழமை, ரவி சந்தித்திருந்தார். செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடி, புதன்கிழமை ஜனாதிபதியை மீண்டும் சந்தித்தோம். இன்று பாராளுமன்றத்தில் தனது அமைச்சுப் தவியை அவர் இராஜினாமா செய்துள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில்

Post a Comment

Followers