Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வு நாட்டின் அமைதி, பொருளாதாரம், அபிவிருத்தி என்பன ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. எனவே, சகல இன, மத மக்களும் இணைந்து பயணத்தை மேற்கொள்வது முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 வருட கால பாராளுமன்ற பிரதிநிதித்துவ நிறைவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது அரசியல் வாழ்வில் நாற்பது வருட நிறைவையொட்டி இப்பிரேரணையை முன்வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமெடுத்தமைக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

நான் முதலில் சட்ட வாக்க சபையில் உறுப்பினராக எனது அரசியலை ஆரம்பித்து பின்னர் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக, சபை முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக பதவி வகித்துள்ளேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்திலேயே நான் அரசியலில் பிரவேசித்தேன். ஜே.ஆரே என்னை அரசியலில் போட்டியிடச் செய்தவர். காமினி திசாநாயக்க, அத்துலத் முதலி போன்ற இளம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தவரும் அவரே. பின்னர் ஜனாதிபதி பிரேமதாசவுடன் செயற்படும் வாய்ப்புக் கிடைத்தது. ஜே.ஆர். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் பிரதமராக செயற்பட்ட காலத்திலும் நான் பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டேன்.

பின்னர் நாம் எதிர்க்கட்சியாகி பெற்ற அனுபவங்கள் வலகம்பாகு மன்னன் நாடேகியது போன்ற அனுபவமே அது. அதிலிருந்து நாம் கற்ற பாடமே முன்னோக்கி செல்ல சிறந்த அனுபவமாகியது.

தற்போது ஆசியா உலகில் பெரும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இலங்கை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் மஹாவலி போன்ற அபிவிருத்திகள் யுத்தம், ஜுலைக் கலவரம், தெற்கு கிளர்ச்சி, இந்திய அமைதிப் படை வருகை, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதி படுகொலை, எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை, பொதுஜன மக்கள் முன்னணியின் ஜனாதிபதியுடன் ஐ.தே.க. அமைச்சர்கள் செயற்பட்ட நிலைகள் போன்றவற்றை சந்தித்துள்ளோம்.

2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற்றமை இரண்டு பிரதான கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைத்தமை போன்றவை நாம் பெற்ற வெற்றிகளாகும்.

பிரதமர், அமைச்சர், பிரதியமைச்சர், சபை முதல்வர் என இந்த அரசியல் வாழ்க்கையில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பல. என்னோடு 40 வருட அரசியலில் உள்ளவர்களின் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனும், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவும் தற்போதுள்ளவர்கள். இரா.சம்பந்தன் 83இல் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்ததால் அவர் அவரது கட்சிப் பிரதிநிதிகளுடன் வெளியேறி மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்தவர். காமினி ஜயவிக்ரம பெரேரா முதலமைச்சராகப் பதவியேற்றுச் சென்று மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்தார்.

நாம் தொடர்ந்த இந்த பயணம் முன்னோக்கிச் செல்ல வேண்டியது. இரா.சம்பந்தனின் கூற்றைப் போல இனப்பிரச்சினைத் தீர்வு, பொருளாதாரம் அமைதிச் சூழ்நிலை போன்றவை ஒன்றோடொன்று தொடர்புபட்டவையே. சகல இன, மத மக்களும் இந்த பயணத்தில் ஒன்றிணைந்து செல்வது முக்கியமாகும். எந்த இனத்தினரும் குறைத்து மதிப்பிடக்கூடியவர்களல்ல.

அரசியல் தீர்வொன்றை இந்த பாராளுமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் எமது பொருளாதாரம் அபிவிருத்தியில் விரைவான முன்னேற்றம் அவசியம், பாராளுமன்றத்தின் பலம் வசதிகள் ஐரோப்பிய, அமெரிக்க பாராளுமன்றங்கள் போல் மேம்படுத்தப்பட வேண்டும். ஒழுக்கம், பொறுமை, பொறாமைப்படாமை வெற்றி தோல்வியை சரிசமமாக ஏற்றுக்கொள்ளல் அரசியலில் முக்கியமானதாகும். எனது அரசியலில் இவற்றை என்னால் கடைப்பிடிக்க முடிந்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியும்: ரணில்

Post a Comment

Followers