Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தற்போதுள்ள எல்லையற்ற ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலையைக் காணத் துடிப்பவர்களுக்கு ஊடகங்கள் துணை போகக் கூடாது என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஊடகங்களுக்கு சட்ட திட்டங்களை விதிக்காது. எனினும் மக்களுக்கு உண்மையை வழங்கும் பொறுப்பு ஊடகங்களுடையது. நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக ஒடுக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஊடகத்தை சிறைப்பிடித்த யுகம் இன்றில்லை. தகவல்களை திரிபுபடுத்தாமல் செயற்படும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறு சிறு பொய், திரிபுபடுத்தல் என்பது ஊடக கலாசாரத்தில் உள்ள நிலை. இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு விடயங்களை திரிபுபடுத்துவது மட்டுமன்றி விடயங்களை உற்பத்தி செய்யும் நிலை ஆரம்பித்துள்ளது. இன்று பல சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் எந்தவித உண்மையுமில்லாத பொய்யை உற்பத்தி செய்கின்றன என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான்கு தசாப்தங்களாக ஊடக கலாசாரம் மற்றும் மக்கள் உரிமையைப் பாதுகாப்பதில் மட்டுமன்றி ஊடகவியலாளர்களுக்குப் போதிய அறிவைப் பெற்றுக் கொடுப்பதிலும் தேசிய பத்திரிகை பேரவை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை எல்லையற்ற விதத்தில் ஊடக சுதந்திரத்தை தவறாக உபயோகிப்பதைத் தடுப்பதும் இந்தப் பேரவையின் செயற்பாடாகும்.

வரலாற்றை நாம் நோக்கும் போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் ஊடகங்களுக்குப் பல்வேறு வகையில் தடைகளை விதித்ததைக் காணலாம். பலவந்தமாக செயற்பட்டு ஊடக கலாசாரத்தை சீர்குலைப்பதிலும் அத்தகையோர் முனைப்புடன் செயற்பட்டனர். இது தொடர்பில் 1993இல் குணதாச தமது நூலில் குறிப்பிட்டிருந்தார். எந்த நாட்டிலும் அரசாங்கத்தினால் பத்திரிகைத் துறை வழிநடத்தப்பட்டால் அங்கு ஜனநாயகம் இருக்கமுடியாது. பலவந்தமாக அந்த செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதுவே அந்த நாட்டின் கடைசி காலமாக அமையும்.

அரசாங்கத்திற்கும் ஊடகத்துறைக்குமான நிலையான நட்புறவே அந்த நாட்டின் ஜனநாயகத்தின் இருப்புக்கு அத்தியாவசியமானதாக அமையும். இதில் ஒரு தரப்பு மட்டும் வெற்றிபெறுமானால் அங்கு ஜனநாயகம் தோல்வியுறும் என்பதே அவரது கூற்று.

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் கடந்த யுகத்தில் நாம் காணாத ஊடக சுதந்திரத்தைக் காண முடிந்துள்ளது. அத்தகைய சிறந்த சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அழுத்தங்களின்றி ஊடகவியலாளர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மிக மோசமான ஊழல் இருள் நிறைந்த காலமாகவும் ஊடகங்களை ஒடுக்கிய காலமாகும் கடந்த அரசாங்கத்தின் காலத்தைக் குறிப்பிட முடியும். அரச விரோதம் ஊடகத்திற்கு எதிராக செயற்பட்ட யுகம் அது.

ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டு எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை கடந்த அரசாங்க காலத்தில் தான். ராஜபக்ஷ ஆட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணியாத ஊடகவியலாளர்கள் 87 பேர் பல விதத்தில் தாக்கப்பட்டுள்ளனர். பலரை அந்த அரசு கொல்லாமல் கொன்றும், சிலரை சிறையிலுமிட்டது.

லங்கா ஈ நியூஸ், சிரச, சியத போன்ற ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகின. மேலும் பல நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.

2006 ஜனவரியில் திருகோணமலையில் சுடரொளி பத்திரிகை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் படுகொலை சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களுக்கு அப்பால் தொடர்ந்தது.

சண்டே லீடர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் விசாரணைகள் இன்றும் தொடர்கிறது. இப்படுகொலையில் அரசாங்கத்தின் பொறுப்பான ஒருவர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

தெற்கில் கீத் நொயர், போத்தல ஜயந்த ஆகியோர் போன்று வடக்கிலும் ஊடக அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. எவரென்று தராதரம் பார்க்காது வெள்ளை வேன் கலாசாரம் பிரயோகிக்கப்பட்டது.

நாம் அந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இலங்கை தம்முடையது மட்டுமே என நினைத்து செயற்பட்ட இருளான யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டது. உலக முன்னிலையில் நாம் பண்பட்ட மனிதர்களாக செயற்பட அடிமைத்தனமான நிலை சமூகத்திலிருந்தே களையப்படுவது அவசியம். அந்த சிந்தனை தோற்கடிக்கப்படுவது அவசியம். தற்போது அதற்கான மாற்றம் உருவாகியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் இரத்த ஆறினை ஓட வைப்பதற்கு ஊடகங்கள் துணை போகக் கூடாது: மங்கள சமரவீர

Post a Comment

Followers