Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“முதலமைச்சராக வர விரும்புகிறேன், 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் தனி மனிதன் அல்ல. மக்களில் ஒருவனாகவே இருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் உழைக்க தயாராக இருக்கிறேன். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நேர்மையானவர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களும் நேர்மையாக இருந்தால்தான் அது சாத்தியமாகும்.

தவறானவர்கள் பொறுப்புகளுக்கு வந்த குற்றத்தை செய்ததில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் எப்படி நேர்மை இருக்கும். மக்கள் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாயை ஒரு நாளில் சம்பாதித்து விட முடியும். ஆனால் அந்த ஐந்தாயிரத்துக்கு ஐந்து வருடங்களை கொடுத்து தவறுகள் செய்து விட்டார்கள்.

இந்த குற்றங்களில் இருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். மக்கள் மாற வேண்டும். வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால்தான் நேர்மையானவர்கள் தலைவர்களாக வர முடியும். நான் நேர்மையாளனாக இருப்பேன். நான் உடனடியாக அரசியலில் குதிப்பேன் என்று சொல்ல முடியாது.

அரசியலுக்கு வரவேண்டும் என்பது எனது ஆர்வம். ஆனால் அதற்கு நான் தயாராக வேண்டி இருக்கிறது. அடித்தளத்தை வலிமையாக அமைக்க வேண்டி இருக்கிறது. சுமையை தாங்கிக்கொள்ளும் சக்தியையும் பெற வேண்டி இருக்கிறது. இதற்காக மக்களை விரைவில் சந்திக்க இருக்கிறேன்.

தமிழகத்தில் ஏற்கனவே கருவூலம் காலியாக இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பாதியில் நிற்கின்றன. அவற்றையெல்லாம் புதிய தலைமையினாலோ புதிய கட்சியினாலோ உடனடியாக சரி செய்ய முடியாது. அரசியலுக்கு வருவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.

தலைமை என்ற குல்லாவை எனது தலையில் அணிய மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதை அணிய தகுதியானவனாக என்னை தயார்படுத்திக் கொள்வேன். பல்வேறு கொள்கைகள் உள்ள தலைவர்களை நான் சந்தித்து பேசினாலும் எனது கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். எனது கொள்கையை ஏற்பவர்கள் தாராளமாக என்னுடன் சேரலாம். நான் இடதுசாரியா, வலதுசாரியா என்றெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.

அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக அதை மாற்றுவதற்காகத்தான் அரசியலுக்கு வர விரும்புகிறேன். மக்கள் ஊழலில் சிக்கி தவிக்கிறார்கள். சுகாதாரம், கல்வி, விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினைகள் நமக்கு தேவை இல்லை. பலர் தமிழக முதல்வராக வர விரும்புகிறார்கள். நானும் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக முதல்-அமைச்சராக விரும்புகிறேன். ஊழலுடன் கைகோர்ப்பவர்களை வெளியே அனுப்ப வேண்டும்.

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் ஒரு கட்டாய திருமணம்போலத்தான் இருக்கிறது. இந்த திருமணத்தில் இருந்து வெளியேற மக்கள் விரும்புகிறார்கள். இன்னும் 100 நாட்களில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் நான் களத்தில் இருப்பேன்.

நானும் ரஜினிகாந்தும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் போட்டியாளர்களாகத்தான் இருந்தோம். நான்கைந்து வாரங்களுக்கு முன்னால் ரஜினிகாந்தை சந்தித்தேன். அவருடன் பேசுவதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. ரஜினிக்கும், எனக்கும் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இருக்கிறது.

ஆனாலும் நாங்கள் வேறு வேறு வழியில்தான் செல்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் இருவருமே ஒரு முன் உதாரணமாகவே இருக்க விரும்புகிறோம். நான் ரஜினிகாந்த் குறித்து தவறாக பேசப்போவது இல்லை. அவரும் அப்படித்தான் இருப்பார்.

நான் எந்த ஒரு கட்சியிலும் இணைந்து செயல்பட விரும்பவில்லை. தனியாகத்தான் செயல்படுவேன். அனைத்து கட்சிகளுடன் நல்ல உறவு இருக்கும். ஆனால் தனியாகவே செயல்படுவேன். எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை உண்டு. ஆனால் எந்த மதத்துக்கும், கடவுளுக்கும் எதிரானவனாக இருக்க மாட்டேன்.

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டம், பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட சில விஷயங்களில் நல்ல முயற்சியை மேற்கொண்டு வருகிறார். நான் ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்துவதால் விமர்சிக்கப்படுகிறேன். அரசியலுக்கு வந்து கருத்து சொல்லும்படி பேசுகிறார்கள். நான் அரசியலில்தான் இருக்கிறேன்”என்றுள்ளார்.

0 Responses to முதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.