Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஆண்டுதோறும் 17,000 புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும், அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

புதிதாக ஒவ்வொரு நாளும் 6-7 பேர் வரை மார்பக புற்றுநோயினால் தாக்கப்பட்டுள்ளவர்கள் இனங்காணப்படுகின்றனர். 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பக பற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாவதாக மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவரான நைனா டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

"புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இனங்காண்டுவிட்டால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். பெரும்பாலோர் 3ஆம், 4ஆம் கட்டங்களில் அதிக காலத்திற்கு பிறகு தாமதமாகி வருவதால் குணப்படுத்துவது கடினமாகி விடுகிறது. 5 வருடங்கள் கூட அவர்கள் உயிரோடு இருப்பது கடினம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு வைத்தியசாலைகளில் 800 புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அதன் மூலம் மக்கள் தங்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.

"இலங்கையில் ஆண்டுதோறும் 2,500 மார்பக புற்றுநோயாளிகள் உட்பட சுமார் 17,000 அனைத்து வகையிலான புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்ற அதேவேளை, 13,000 புற்று நோயாளிகள் மரணமடைகின்றார்கள்" என்கின்றார் தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரான மருத்துவர் சுதத் சமரவீர.

"புற்றுநோய் வராமல் ஆரம்பத்திலே தடுப்பு மருந்து மூலம் தடுக்கின்ற வகையிலே, குறிப்பாக பள்ளிக் கூடங்களில் 6ஆம் வகுப்பு மாணவியருக்கு HPV தடுப்பூசி போடப்படுகின்றது" என்றும் அவர் கூறியுள்ளார்.

"புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியில் அதனால் வரக்கூடிய புற்றுநோய் அதிகரித்ப்பு காணப்படுகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 38 ஆயிரம் மரணங்கள் பதிவாகின்றன. 75 சதவீதமான மரணங்கள் இருதநோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களால் ஏற்படும் மரணங்கள் என அறிக்கையிடப்பட்டுள்ளன.

அந்த மரணங்களில் குறிப்பாக 40 சதவீத மரணங்கள் இருத நோய் காரணமாக நிகழ்கின்றது. புற்றுநோயால் 10 சதவீதத்தினரும், சர்க்கரை வியாதியால் 7 சதவீதத்தினரும் மரணம் அடைவதாக சமூக வைத்திய நிபுணரான சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையால் அத்தகைய நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையிலும் அதிகரிப்பை காண முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1985 ஆம் ஆண்டு 4,416 என்று அறிக்கையிடப்பட்ட புற்றுநோயாளிகளின் மரணங்கள், 2005ஆம் ஆண்டு 9, 403 ஆக அதிகரித்ததோடு, 2009ஆம் ஆண்டு தரவுகளின்படி இது 11,286ஆக கூடியிருப்பதாகவும் அவரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

0 Responses to இலங்கையில் ஆண்டுதோறும் புதிதாக 17,000 புற்றுநோயாளர்கள்: சுகாதார அமைச்சு!

Post a Comment

Followers