Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரணைதீவில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் காணிகளில், 186 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இரணைதீவு காணி விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் பூநகரி கடற்படைத் தளத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு படையினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது முதலில் இரணைத்தீவு காணிகளை விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் இக்காணியை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தனர்

இரணைதீவு பகுதி, தேசிய பாதுகாப்புக்கு முக்கிய ஒரு இடமாக இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும் ராடர் கண்காணிப்பு நிலையங்கள் இருப்பதனால் இரணைத்தீவினுடைய வடக்குப் பகுதி முழுமையாகத் தேவையென்றும் கடற்படையினர் குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை, அந்தப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றும் போது கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள கடல்வாழ் உயரினங்கள் அழிவடையும். அத்துடன், அங்கு குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என குடியேறுவதை தடுக்கும் வகையில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து, 400 வருடங்களுக்கு மேல் இத்தீவிலே மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், அவர்களது வாழ்வாதாரம் இங்கேதான் இருக்கின்றது. இத்தீவு விடுவிக்கப்படவேண்டுமெனவும் பாரளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இரணைத்தீவுப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 186 ஏக்கர் காணியை அடையாளப்படுத்துவதற்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர். இதற்கான குழுவொன்றை நியமித்து அதன் மூலம் 186 ஏக்கர் காணியையும் அடையாளப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இதேவேளை, இப்பகுதி கடற்தொழிலாளர்கள் படகுகளை நிறுத்துவதற்கு 400 மீற்றர் கரையோரப்பகுதியையும் விடுவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரை மாத்திரம் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த வாரம் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் இரணைமாதா நகரைச்சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் சென்று காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அனுமதி வழங்க கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

0 Responses to கிளிநொச்சி இரணைதீவில் கடற்படை ஆக்கிரமித்துள்ள காணிகளில் 186 ஏக்கரை விடுவிக்க இணக்கம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.