Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை இரத்து செய்ய கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை இரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக் கோரியும், தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியும், ஆளுநரிடம் டிடிவி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் மனு கொடுத்தனர். இதையடுத்து, அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் ஆளுநரிடம் மனு அளித்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் சம்மன் பிறப்பித்தார். அதில் எடப்பாடி ஆதரவு நிலையை எடுத்த ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மீண்டும் கடிதம் கொடுத்தார். இந்நிலையில், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடக் கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணையின்போது, பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளது. எனவே நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, வரும் 20ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்ததுடன் அதுவரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும் கவர்னர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, பேரவைத் தலைவர் தனபால், திடீரென்று நேற்று முன்தினம் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளதால் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

0 Responses to 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை இரத்து செய்யக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையினால் தள்ளுபடி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...