Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் அமைந்துள்ள அகுங் என்ற உயிர் எரிமலை உடனடியாக வெடித்துச் சிதறக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து கிட்டத்தட்ட 50 000 பொது மக்கள் பாதுகாப்பாக தமது இல்லங்களில் இருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாக இந்தோனேசியாவின் அனர்த்த முகாமை அமைப்பு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

குட்டா என்ற பிரபல சுற்றுலாத் தலத்தில் இருந்து 75 Km தொலைவில்  அமைந்துள்ள அகுங் எரிமலை சுமார் 50 வருடங்களுக்குப் பின் முதன்முறை ஆகஸ்ட் மாதம் முதல் சீற்றமடைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த ஆபத்தான எரிமலை  வலையத்தில் இருந்து இன்னும் அதிக மக்கள் வெளியேற்றப் படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் 60 000 இற்கும் அதிகமான மக்கள் வரை வெளியேற்றப் படலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பல மக்கள் பிடிவாதமாக வெளியேற மறுத்து வருவதாகவும் பத்திரிகையாளர் மாநாட்டில் அனர்த்த முகாமை ஏஜன்ஸியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக எரிமலை இன்னமும் வெடித்துச் சிதறவில்லை என்பதும் தமது பெறுமதியான வாழ்க்கை உடமைகளை விட்டுச் செல்ல அவர்களுக்கு மனம் இல்லாததும் கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்ச எச்சரிக்கை அழைப்பை அதிகாரிகள் விடுத்திருந்ததுடன் பொது மக்களை எரிமலையில் இருந்து குறைந்த பட்சம் 9 Km அப்பால் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த எரிமலை மலைப் பகுதிகளுக்கு அண்மையிலான சுற்றுலாக்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் பல சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் எரிமலைப் பகுதிக்கு அண்மையில் வசித்து வந்த 2000 பசுக்களும் கூட அகற்றப் பட்டு அவை கவனிக்கப் பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அமைந்துள்ள 120 உயிர் எரிமலைகளில் ஒன்றான அகுங் எரிமலை கடைசியாக 1963 இல் வெடித்துச் சிதறிய போது 1000 பேர் வரை பலியாகி இருந்ததுடன் தலைநகர் ஜகார்த்தா வரை கரும் சாம்பல் புகையால் சூழப் பட்டும் இருந்தது. பாலியில் உள்ள மிக உயர்ந்த மலைச் சிகரமான அகுங் பாலி இனத்தவருக்கு முக்கிய ஆன்மிகப் பகுதியும் ஆகும்.

0 Responses to இந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தால் 50 000 பொது மக்கள் வெளியேற்றம்

Post a Comment

Followers