Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் அதன் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அவசரப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடும்போக்காளர்களே இலாபமடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமைப்படுத்துவதற்கு இரண்டு வருட காலம் தமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் சையில் அல் ஹூசைனுக்கு ஜனாதிபதி அழைப்பு விம்முள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கிய ஜனாதிபதி, இந்த அனைத்து நடவடிக்கைகளை, நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங்களையும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டே முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இந்த விஜயத்திற்கு முன்னர் தான் கையொப்பமிட்டதாகவும், அதன் நடவடிக்கைகள் செயற்திறனாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தேச வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள கிழக்கு மாகாணத்தின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கில் உள்ள காணிகளில் குறிப்பிடத்தக்களவு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவை நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முறையாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டுவதாக குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையாளர், முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கான பயணம் மேலும் விரைவுபடுத்தப்படுமாயின் மகிழ்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நல்லிணக்க செயற்பாடுகள் படிப்படியாக முன்னேற்றம்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் மைத்திரி எடுத்துரைப்பு!

Post a Comment

Followers