Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கண்டித்துள்ளது.

அத்தோடு, கருக்கலைப்பு சட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பது மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் பேரவை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

“கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டு அமர்வில் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எக்காரணத்திற்காகவும் கருக்கலைப்பு சட்டம் அமுலாக்கப்படக்கூடாது. ஒருவரின் உயிர்வாழ்வு அவரது கருத்தரிக்கும் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகிறது என்பது திருச்சபையின் நம்பிக்கையாகும். அது ஒரு புனிதமான செயற்பாடு. மனித உயிரை இல்லாதொழிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.” என்றும் ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

“கருக்கலைப்பானது மிலேச்சத்தனம் மற்றும் ஒழுங்கீனமான செயலாகும். இந்தவகையில் கருக்கலைப்பு எனும் பெயரில் இடம்பெறும் கொலையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு உறுதுணையாகவிருக்கும் பெற்றோர் மட்டுமன்றி இதற்கு உதவி செய்யும் வைத்தியர்கள், சட்டங்களை அமுலாக்கும் அரசியல்வாதிகள், அதற்கு அனுசரணை வழங்கும் ஊடகங்கள், இதற்கு ஆதரவாக செயற்படும் மக்கள் அமைப்புகள் இப்பாவத்திற்கு உரித்தானவர்களாவர். அதேவேளை இப்பாவத்திலிருந்து மக்களை மீட்பதற்கு உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருக்கும் ஆயர்கள் குருக்கள், பொது நிலையினர் ஆகிய அனைவருமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.” என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, கருக்கலைப்பை சட்ட ரீதியாக்குவது தொடர்பில் நிபுணர்களால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர, அது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

0 Responses to கருக்கலைப்பினை சட்டபூர்வமாக்குவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு!

Post a Comment

Followers