Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லாமல் அரசு செயல்பட்டு வந்தது. கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்து வந்தார். எதிர்க்கட்சிகள் தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது குறித்து பல கேள்விகளை விமர்சனங்களாக முன் வைத்தன.

இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்துள்ளார். 77 வயதான இவர், மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 3 முறை பன்வாரிலால் பணியாற்றியவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸ் கட்சியில் இருந்த பன்வாரிலால் பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

2016இல் ஆஸிம் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். 2017இல் மேகாலயா மாநில ஆளுநர் பொறுப்பு பன்வாரிலாலுக்கு கூடுதலாக தரப்பட்டது. தனிக்கட்சி தொடங்கி நடத்திய இவர், ஒரு முறை ராஜயசபை எம். பி. ஆகவும் இருந்திருந்தார்.

தமிழ்நாடு, அசாம், பீகார், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அசாம் ஆளுநராக ஜகதீஷ் முகி, பீகார் மாநிலத்திற்கு சத்தியபால் மாலிக், மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி.மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திரகுமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியாவார். ஏற்கனவே இருந்த பேராசிரியர் ஜெகதீஷ் முகிக்கு பதிலாக தேவேந்திரகுமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்!

Post a Comment

Followers