Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட எந்தவொரு இராணுவத் தளபதி மீதோ அல்லது நாட்டின் இராணுவத்தினரின் மீதோ கை வைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கம்பல் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரக் கட்சியை ஜனநாயக கட்சியாக பலப்படுத்துவதுடன், பௌத்த மதகுருமார், மருத்துவர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளர், மீனவர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து சமூக சக்திகளும் ஒன்றிணைந்த விரிவான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டும்.

கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் கொண்ட, சமயத் தலைவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மதித்து நடக்கும், அமரர் பண்டாரநாயக்க அவர்களினதும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களினதும் செயற்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசபிமானம் மிக்க, மக்கள் மயப்படுத்தப்பட்ட, ஜனநாயக கட்சியாக சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதை சிலர் குற்றஞ்சாட்டியபோதும், அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியை அமைத்திராவிடில், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை எமது நாட்டினால் எதிர்நோக்கியிருக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியானது, நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு சுதந்திரக் கட்சியின் செயலாளரையே தேர்ந்தெடுத்தமையினால் கூட்டாட்சியினை ஒத்துழைப்புடன் கொண்டுசெல்ல முடியுமானதாக அமைந்தது.

சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் வரை கட்சியுடன் இணையப்போவதில்லை என்று பலரும் கூறியிருந்தனர். ஆனால், நாடு சவால்களை எதிர்நோக்கியிருந்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அரசியல், இன, மத, மொழி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்ட பல உலக வரலாறுகள் காணப்படுகின்றன.

ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப அதிகாரம் என்பவற்றை அரசியலிலிருந்து நீக்க வேண்டும் என்பதுடன், அதிகாரத்தினை தனது நன்மைக்காக உபயோகிக்காது நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும். அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதும் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவதும் மக்களின் அபிலாஷைகளுக்கேற்பவே நடைபெற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் அதிகாரத்தை உடையவர்கள் அல்ல, மக்களே உண்மையான அதிகாரத்தை உடையவர்கள்.

சுதந்திரக் கட்சியானது கடினமான பாதை ஒன்றையே கடந்து வந்துள்ளது. அதனை எதிர்கால வெற்றியை நோக்கி தயார்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அனைத்து ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினர் மீது கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை: மைத்திரி

Post a Comment

Followers